புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக விவாதம் நடத்தக்கோரியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநில தேர்தலுக்கு பின், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. மாநிலங்களவை மற்றும் மக்களவையில் விலை உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மாநிலங்களவையில் நேற்று விவாதம் நடத்தக்கோரி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால், அவை தலைவர் வெங்கய்ய நாயுடு அனுமதி மறுத்துவிட்டார். அப்போது எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘‘நாள்தோறும் எதிர்கட்சிகள் பெட்ரோல், டீசல், எல்பிஜி, பிஎன்ஜி மற்றும் மருந்து பொருட்கள் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த கோரிக்கை விடுகின்றன. ஆனால், அரசு அது குறித்து விவாதிக்க தயாராக இல்லை. நீங்கள் எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால் நாங்கள் யாரிடம் சென்று பேசுவோம்,” என்றார். மக்களவையிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை எதிர்கட்சிகள் எழுப்பின. அவை 11 மணிக்கு தொடங்கியதும் காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் திமுகவின் டிஆர் பாலு எரிபொருள் விலை உயர்வு விவாதத்துக்கு வலியுறுத்தினார்கள். ஆனால், சபாநாயகர் ஓம்பிர்லா இதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் காங்கிரஸ், திமுக, திரிணாமுல், இடதுசாரிகள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால், 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் தொடங்கியபோதும் அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.