மும்பை,
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு திரில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்தது. ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 70 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய பெங்களூரு அணி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 55 ரன் எடுத்தது. அதன் பின் விக்கெட்டுகள் சரிந்தது. 87 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது.
அதன்பின் தினேஷ் கார்த்திக் – ஷபாஸ் அகமது ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். பெங்களூரு அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்து வென்றது. தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 44 ரன்னும் ஷபாஸ் அகமது 26 பந்தில் 45 ரன்னும் எடுத்தனர். ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்குக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் பெங்களூரு அணியின் அதிகாரப்பூர்வ சேனலில் பேசிய கேப்டன் டு பிளெசிஸ், தினேஷ் கார்த்திக்கை வெகுவாகப் பாராட்டினார், மேலும் அவரை முன்னாள் சென்னை அணியின் கேப்டன் தோனியுடன் ஒப்பிட்டு, அவர் அவரைப் போலவே செயல்படுகிறார் என்று கூறினார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “விளையாட்டில் சிறந்த பினிஷராக இருக்கும் தோனிக்கும் தினேஷ் கார்த்திக்கிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை நான் காண்கிறேன். இந்த ஆண்டு நான் பார்த்தவற்றிலிருந்து இருவரும் ஒரே மாதிரியான பினிஷிங் திறமைகளை பெற்றுள்ளனர். நான் நீண்ட காலமாக தினேஷ் கார்த்திக்கிற்கு எதிராக விளையாடி வருகிறேன். அவர் எப்போதும் மிகவும் ஆபத்தான வீரர். ஆட்டத்தின் சத்தம் மற்றும் அழுத்தத்திற்கு மத்தியில் தினேஷ் கார்த்திக் அமைதியாக இருக்கிறார். என்ன செய்வது என்று அவருக்குத் தெரியும். அவர் மிஸ்டர் ஹை ஸ்கூல்… அணியை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவருவது என்பது அவருக்குத் தெரியும்” என்று டு பிளெசிஸ் தெரிவித்தார்.