புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த கொத்தமங்கலத்தில் இயங்கி வந்த இரண்டு அரசு மதுபான கடைகள் மக்கள் போராட்டத்தினால் கடந்த 2017-ஆம் ஆண்டு மூடப்பட்டது.
மேலும், மீண்டும் அந்த கிராமத்தில் மதுபான கடைகளை திறக்க கூடாது என்று உத்தரவு கோர
வேண்டி அப்போதைய மாவட்ட ஆட்சியரிடம் கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனையடுத்து, அதிகாரிகள் மீண்டும் அந்த கிராமத்தில் மதுபான கடைகளை திறக்க தடை விதித்தனர். இந்த நிலையில், தடைகளை மீறி நேற்று கொத்தமங்கலம் கிராமத்தில் புதிய மதுபான கடை ஒன்று திடீரென திறக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கிராம பொது மக்கள் கொத்தமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மதுபான கடையை உடனடியாக மூடவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்செல்வம், கவுன்சிலர் ராமநாதன் மற்றும் பா.ஜ.க. மணிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, மதுபான கடையை மூட சுற்றுசுழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார்.
இதன் அடிப்படையில் மதுபான கடையை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேற்கொண்டு இதனை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.