’நான் இந்தியா அல்லது அமெரிக்க எதிர்ப்பாளன் அல்ல, பரஸ்பர மரியாதை அடிப்படையில் நல்ல உறவுகளை விரும்புபவன்’ என்று பாகிஸ்தான் இடைக்கால பிதரமர் இம்ரான் கான் கூறினார்.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் இம்ரான் கான் அரசுக்கான ஆதரவை கூட்டணிக் கட்சிகள் விலக்கிக் கொண்டன. இதையடுத்து அவரது அரசுக்கு எதிரானநம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளார். இடைக்கால பிரதமராக பதவியில் நீடிக்கும்படி இம்ரான் கானை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த பரபரப்பான அரசியல் நிகழ்வுகளை தொடர்ந்து, தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் இம்ரான் கான் நேற்று முன்தினம் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறும்போது,“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் தேர்தலுக்கு தயாராகாமல் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளனர். இது தேர்தல் குறித்த அவர்களின் அச்சத்தையே காட்டுகிறது.
நான் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானவன் அல்ல. நான் இந்திய எதிர்ப்பாளன் அல்ல. அதுபோல் அமெரிக்க எதிர்ப்பாளனும் அல்ல.ஆனால் அவர்களின் கொள்கைகளுக்கு எதிரானவன். நான் அவர்களுடன் நட்புறவை விரும்பினேன். ஆனால் இதற்காக மரியாதையை விட்டுத்தர முடியாது.
அமெரிக்காவுக்கு எதிராக தவறான நோக்கம் எனக்கு இல்லை. பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடாத பரஸ்பர நட்புறவை அமெரிக்காவிடம் விரும்பினேன்.
இறையாண்மை கொண்ட பிறநாடுகளை மதிக்காமல், உத்தரவுகளை மட்டுமே பிறப்பிக்கின்ற எந்தொரு நாட்டுக்கும் நான் எதிரானவன். ஆனால் இந்த நாடுகளுக்குசேவை புரிபவர்களாக எதிர்க்கட்சியினர் உள்ளனர்” என்றார்.
இந்தியாவுக்கு எதிராக பேசி வந்த இம்ரான் கான் சமீப காலமாக இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்காக நம் நாட்டை புகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
–பிடிஐ