இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பார்லி.,யில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் அதே நேரத்தில், பொது தேர்தலுக்கான தேதிகளை அறிவிக்குமாறு அதிபர் ஆரிப் அல்வி தேர்தல் கமிஷனிடம் கேட்டுள்ளார்.
அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் சமீபத்தில் நிராகரித்தார். இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று, 342 உறுப்பினர்கள் அடங்கிய பார்லி.,யை கலைத்து, 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்த அதிபர் ஆரிப் அல்வி உத்தரவிட்டார். இந்த விவகாரத்தை பாக்., உச்ச நீதிமன்றம் தானாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில், பார்லி., கலைக்கப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்குள் பொது தேர்தல் நடத்துவதற்கு உகந்த தேதிகளை பரிந்துரைக்குமாறு அந்நாட்டு தேர்தல் கமிஷனிடம், அதிபர் ஆரிப் அல்வி கேட்டுக் கொண்டார்.இதற்கிடையே, நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கு பாக்., உச்ச நீதிமன்றத்தில் மூன்றாவது நாளாக விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி உமர் அடா பந்தியால் பிறப்பித்த உத்தரவு:துணை சபாநாயகர், எந்தவித ஆதாரத்தையும் சமர்ப்பிக்காமல், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எந்த அடிப்படையில் நிராகரித்தார் என்பதை நீதிமன்றத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும். வெளிநாட்டு சதியின் பேரில் பாக்., அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் துணை சபாநாயகர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.வழக்கு விசாரணை இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உறவு பாதிக்காது: சீனா விளக்கம்
சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஸாவோ லிஜியான் கூறியதாவது: பாகிஸ்தானில் தற்போது நிலவும் அரசியல் சூழலால் இரு தரப்பு உறவு பாதிக்காது. நாட்டின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை பாதிக்காமல் இருக்க அரசியல் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்படுவர் என நம்புகிறோம்.மற்ற நாடுகளின் உள்நாட்டு பிரச்னையில் தலையிடக்கூடாது என்ற கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது.
சர்வதேச நிலப்பரப்பு எப்படி உருமாறினாலும், சீனா – பாகிஸ்தான் இடையிலான உறவு எப்போதும் உறுதி படைத்தது என்பதை வரலாறு மீண்டும் நிரூபித்துள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழல், சீனா – பாக்., இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார பெருவழிச்சாலை திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement