அடுத்த தவணையிலிருந்து பாடசாலை நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த வருடத்திற்கான (2022) பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு 139 நாட்கள் மட்டுமே இருப்பதனால் பாடசாலை நேரத்தை மேலதிகமாக ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு மணித்தியாலம் நீடிப்பதன் மூலம் சுமார் 20 நாட்கள் கற்பித்தல் காலத்தை கூடுதலாக மேற்கொள்ள முடியும் என்பது கல்வி அமைச்சின் எதிர்பார்ப்பாகும்.
கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட பின்னரும் பாடத்திட்டத்தை உள்வாங்க முடியாத பட்சத்தில் மூன்றாம் தவணையில் சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவது குறித்தும் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
அத்துடன், இந்த வருடத்திற்கான (2022) புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதியும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையும் 2023 ஜனவரி மாதம் முதலாவது வாரத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை,கடந்த வருடம் நடைபெறவிருந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.