பாரதிய ஜனதா கட்சி, ஆரம்பித்து இன்று 42 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் உள்ள தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா’ கட்சியின் 42வது நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சித் தொண்டர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“பாஜகவின் 42 ஆண்டு கால பயணம் தேசிய சேவை, மேம்பாடு மற்றும் புனரமைப்பு ஆகியவற்றில் ஒன்றாகும். நரேந்திர மோடி தலைமையில், 7 தசாப்தங்களாக நாட்டின் கோடிக்கணக்கான ஏழைகள், விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களின் ஆசைகளை நிறைவேற்றும் ஒரு வழிமுறையாக பாஜக மாறியுள்ளது.
தேசத்தின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அனைத்து கட்சி தொண்டர்களுக்கும் நிறுவன தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று அமித் ஷா இந்தியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும், கட்சித் தொண்டர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஏப். 6) பாஜகவின் 42 வது நிறுவன நாளின் போது கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார்.
“இந்த ஆண்டு ஸ்தாபக தினம் மூன்று காரணங்களால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. முதலில், 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடுகிறோம்; இது உத்வேகத்திற்கான முக்கிய சந்தர்ப்பம்”.
“இரண்டாவது, வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழ்நிலை; இந்தியாவிற்கு தொடர்ந்து புதிய வாய்ப்புகள் வருகின்றன. மூன்றாவதாக, சமீபத்தில் நான்கு மாநிலங்களில் பாஜகவின் இரட்டை இயந்திர அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு கட்சி ராஜ்யசபாவில் 100 உறுப்பினர்களை தொட்டுள்ளது.” பிரதமர் கூறினார்.
இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியின் 42வது நிறுவன நாள் தமிழகத்திலும் கொண்டாடப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் 42 ஆம் ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, தொண்டர்களிடம் உரையாற்றிய காணொளி நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் பா.ஜ.க நிர்வாகி மற்றும் தொண்டர்களுடன் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
அதேபோல் சென்னையில் டி.நகரில் நடைபெற்ற பா.ஜனதா கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியில், நடிகை குஷ்பு பங்கேற்று பா.ஜனதா கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற குஷ்பு காவிநிற தொப்பி, காவி நிற துண்டு அணிந்திருந்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக, குஷ்பு கொடியை தலைகீழாக ஏற்றினார். பிறகு மீண்டும் கொடி இறக்கப்பட்டு, சரிசெய்யப்பட்டு சரியாக ஏற்றப்பட்டது.
குஷ்பு கொடியை தலைகீழாக ஏற்றும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“