புச்சா:உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து படைகளை திரும்பப் பெறும் நிலையில், நாட்டின் தென்கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் ராணுவத்தின் எதிர் தாக்குதலால், தலைநகர் கீவ் நகருக்குள் நுழைய முடியாமல் ரஷ்யப் படைகள் திணறின. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சில், தலைநகர் கீவில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ரஷ்யா அறிவித்தது.
அதன்படி அங்கிருந்து ரஷ்யப் படைகள் திரும்பத் துவங்கியுள்ளன. இந்நிலையில், கீவ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அப்பாவி மக்கள் சித்ரவதை செய்யப்பட்டு, கொல்லப் பட்டு உள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.கைகள் கட்டப்பட்ட நிலையில், எரிந்த நிலையில், துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பல சடலங்கள் சாலைகளில் கிடப்பது தெரியவந்தது. இதற்கு பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உக்ரைன் ராணுவம் கூறிஉள்ளதாவது:ரஷ்யா அப்பாவி மக்களை கொன்று போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட உள்ளது. தலைநகர் கீவ் நகரில் இருந்து வெளியேறிய ரஷ்ய ராணுவம், நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
ரஷ்ய ராணுவ ஆதரவு பெற்றுள்ள பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பிராந்தியம் வழியாக உக்ரைனுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வருகிறது. இதை எதிர்க்க தயாராக உள்ளோம்.இவ்வாறு உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.
பயங்கரவாத நாடு
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ரஷ்யாவின் போர் நடவடிக்கை, எந்தவொரு பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளுக்கும் சற்றும் குறைவில்லாததாக இருக்கிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள ஒரு நாடே இதுபோன்ற பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், உக்ரைனில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை உலக நாடுகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
‘ஆசிட் டேங்கர்’ வெடிப்பு
உக்ரைனின் கிழக்கே உள்ள லுஹான்க்ஸ் பகுதி மக்களுக்கு அந்தப் பிராந்திய அரசு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில், ‘நைட்ரிக் ஆசிட்’ ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்துச் சிதறியுள்ளது. இதனால், நச்சுப் புகை பரவும் அபாயம் உள்ளது. அதனால், ஜன்னல் உள்ளிட்டவற்றை மூடி மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி, பிராந்திய அரசு எச்சரித்துள்ளது.
சோகத்தை ஏற்படுத்திய படம்
உக்ரைன் நாட்டவர்களை ரஷ்ய வீரர்கள் சித்ரவதை செய்து, கொலை செய்து உடல்களை சாலைகளில் வீசியுள்ள படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான படம் ஒன்று போரின் சோகத்தை உணர்த்தியுள்ளது.தன் சிறு குழந்தையின் முதுகில் தாய் தன் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
ஒருவேளை தான் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டால் அல்லது பிரிய நேரிட்டால், குழந்தையால் குடும்பம் குறித்த விபரங்களை தெரிவிக்க முடியாது என்பதால், அதன் முதுகில் எழுதியுள்ளதாக அந்த தாய் தெரிவித்துள்ளார். இதுபோல, பல பெற்றோர், தங்களுடைய விபரங்களை குழந்தைகளின் முதுகில் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.