புதுச்சேரி : ‘புதுச்சேரியில் வரும் 13ம் தேதி முதல், 16ம் தேதி வரை கடற்கரை திருவிழா நடைபெற உள்ளது’ என அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில் சிறந்த சுற்றுலா நகரமாக புதுச்சேரி மாறியுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்து வருகின்றனர். இதனால் பல்வேறு சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் கடந்த ஆண்டு களில் ஏற்படுத்தப் பட்டது.
வம்பா கீரப்பாளையம் பாண்டி மெரினா கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று, வீராம்பட்டிணம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டிணம் ஈடன் கடற்கரை மேம்படுத்தப்பட்டு, சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் செலவிடும் நாட்களை அதிகப்படுத்தப் பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய சுற்றுலா வருவாய் குறைந்தபோதிலும், அரசின் தீவிர முயற்சியால் அதை மீட்டெடுத்து உள்ளோம்.புதிதாக உருவாக்கப்பட்ட கடற்கரைகளை சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், சுற்றுலா துறை சார்பில் வரும் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை, கடற்கரை திருவிழா நடைபெற உள்ளது.
காந்தி சிலை கடற்கரை, பாண்டி மெரினா, சுண்ணாம்பாறு பேரடைஸ் கடற்கரை, காந்தி திடல் கைவினை அரங்கு ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள், கடல்சார் விளையாட்டுகள், கடல் உணவு விற்பனை, மேலை நாட்டு இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சி, கருத்தரங்கு போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மேலும், கட்டுமர படகு செலுத்துதல், மிதிவண்டி மராத்தான், கடற்கரை வாலிபால், பட்டம் விடுதல் ஆகிய போட்டிகளும் நடக்கிறது.அதிகாலையில் மீன் உணவு தேடல், இசை, ஜிம்னாஸ்டிக், உறியடி, பேஷன் ஷோ என பல்வேறு நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடத்தப்பட உள்ளது. புதுச்சேரியில் முதல் முறையாக நடைபெறும் இந்த விழா, இனி ஆண்டுதோறும் நடத்தப்படும். தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு இந்த விழாவை ஆரம்பித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். போட்டியின்போது, சுற்றுலா துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குநர் பிரியதர்ஷினி உடனிருந்தனர்.