பெங்களூரு, : பெங்களூரு — ஹாசன் இடையே, தென் மேற்கு ரயில்வேத்துறை, மீண்டும் ரயில் போக்குவரத்தை துவங்கவுள்ளது. நாளை முதல் ரயில் போக்குவரத்து துவங்கும்.தென் மேற்கு ரயில்வேத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா முதல் அலைக்கு முன், பெங்களூரின், யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்திலிருந்து, ஹாசன் வரை ரயில் இயக்கப்பட்டது. இது இரு நகரங்களின் பயணியருக்கு, உதவியாக இருந்தது.
தொற்று தீவிரமடைந்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பெங்களூரு – -ஹாசன் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.தற்போது தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. எனவே ரயில் போக்குவரத்தை துவக்க, தென் மேற்கு ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.ஆனால் யஷ்வந்த்பூருக்கு பதில், மெஜஸ்டிக் நிலையத்திலிருந்து, ஹாசனுக்கு ரயில் இயக்கப்படும்.பெங்களூரு — ஹாசன் இடையிலான ரயில் பாதை, மின் மயமாக்கப்படுகிறது.
இப்பணிகள் முடிந்தால், இரு நகரங்களுக்கிடையே, கூடுதல் ரயில்களை இயக்க முடியும்.புதிய ரயில் போக்குவரத்து, நாளை துவங்குகிறது. ஞாயிறை தவிர, மற்ற கிழமைகளில் தினமும் இந்த ரயில் இயங்கும்.திங்கள் முதல் சனி வரை, தினமும் காலை 9:45 மணிக்கு, மெஜஸ்டிக் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில், 9:57 மணிக்கு, யஷ்வந்த்பூருக்கு வரும்.இங்கிருந்து 9:59 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1:45 மணிக்கு ஹாசனை சென்றடையும். ஹாசன் ரயில் நிலையத்தில், அரை மணிநேரம் நிற்கும். மதியம் 2:15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, ரயில் மாலை 6:00 மணிக்கு, மெஜஸ்டிக் ரயில் நிலையத்தை அடையும்.எட்டு பெட்டிகள் கொண்ட டெமு ரயில், யஷ்வந்த்பூர், குனிகள், ஷிரவண பெலகோளா, சென்னராயபட்டணா வழியாக, ஹாசனை சென்றடையும். இப்பாதையில் 15 நிலையங்களில் ரயில் நிற்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement