பொம்மை தொழில்களுக்கு தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்: மக்களவையில் கனிமொழி எம்பி கேள்வி

புதுடெல்லி: திமுக மகளிர் அணி செயலாளரும் மக்களவை குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி மக்களவையில் நேற்று எழுப்பிய கேள்வியில், ‘‘பொம்மை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (பிஐஎஸ்) சான்றிதழ் குறிப்பிட்ட அளவுதான் வழங்கப்படுகிறது என்பது குறித்து அரசு அறிந்துள்ளதா? பிஐஎஸ் தரச்சான்று களை சிறு குறு நடுத்தர தொழில் செய்பவர்கள் அனைவருக்கும் படிப்படியாக வழங்குவதற்கு அரசு பரிசீலித்து வருகிறதா?” என்றார்.இதற்கு பதிலளித்த ஒன்றிய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே அளித்த பதிலில், ‘‘பிஐஎஸ் தரச்சான்று கடந்த மார்ச் 28ம் தேதி நிலவரப்படி 630  உள்நாட்டு பொம்மை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  மொத்தம் 661 பொம்மை உற்பத்தியாளர்களுக்கு இந்த தரச்சான்று வழங்கப்பட்ட நிலையில்  அவற்றில் 630 தரச்சன்றிதழ், அதாவது 95% சிறு குறு நடுத்தர பொம்மை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தரக்கட்டுப்பாடு ஆணை 2020, பிஐஎஸ் சட்டம் 2016 பிரிவு 16 இன் படி தொழில் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு பொம்மைகளின் பாதுகாப்புக்கான இந்திய தர நிலைகளுக்கு இணங்குவது கட்டாயமாகும்.  இந்தியாவில் பொம்மை உற்பத்திக்கான ஐஎஸ்ஐ சான்றிதழை பெறுவதற்கு பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. இதன்படி ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகளை உற்பத்தி செய்யவோ இறக்குமதி செய்யவோ வினியோகிக்க விற்கவோ சேமித்து வைக்கவோ காட்சிப்படுத்தவோ முடியாது’’ என்று கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.