புதுடில்லி:நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, சட்டம் – ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை வெளியிட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த நான்கு ‘யுடியூப் சேனல்’ உட்பட, 22 சேனல்கள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன.
சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் வகையில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, பொய் செய்திகள், வன்முறையைத் துாண்டும் வகையிலான கருத்துகளை பதிவிடும் சமூக வலைதளங்கள் உள்ளிட்டவை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, மத்திய அரசின் செய்தி, ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, வெளிநாட்டு கொள்கை, பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகள் வெளியிட்டதாக, 22 யுடியூப் சேனல்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதில், நான்கு சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படுபவை. இந்த சேனல்களை மொத்தமாக, 260 கோடி பேர் பின்தொடர்வதாக கூறப்படுகிறது. இவற்றைத் தவிர, சில சமூக வலைதளக் கணக்குகளும், ஒரு செய்தி இணையதளமும் முடக்கப்பட்டுள்ளன. இவற்றையும் சேர்த்து, இதுவரை, 78 யு டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement