இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல் நெருக்கடியும் தலைதூக்கியுள்ளது. எனவே, அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணாவிட்டால், பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையும் அபாயம் உள்ளது.
இலங்கையில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ள நிலையில், அரசியல் நெருக்கடியை தீர்க்க பல தரப்பினரும் யோசனைகளை முன்வைத்துவருகின்றனர். இன்றும் (ஏப்ரல், 6ம் தேதி), நாளையும் (ஏப்ரல், 7ம்தேதி) நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.
2020 ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதன்படி 9 ஆவது நாடாளுமன்றத்துக்கு 2025 வரை பதவி காலம் உள்ளது. இந்த காலப்பகுதிக்கு முன்னர் – நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமானால், அரசியலைமைப்பின் படி, முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற நாளில் இருந்து இரண்டரை வருடங்களுக்கு பிறகே அதிபரால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். இதற்காக 2023 பிப்ரவரி வரை காத்திருக்க வேண்டி வரும்.
மேலும் படிக்க | Srilanka Crisis: இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையும் குடும்ப அரசியலும்…
அதேபோல விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமெனில், அதற்கான யோசனையொன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு மூன்றிலிரண்டு என்ற பெரும்பான்மை அவசியமில்லை.
அரசமைப்பில் மேலே குறிப்பிட்டுள்ள இந்த இரு ஏற்பாடுகள் மட்டுமே உள்ளன.
அதேவேளையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் நேற்று (ஏப்ரல் 5ம் தேதி) நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் அரசியல் நெருக்கடியை தீர்ப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதில் 3 வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது
1. அதிபர் பதவி விலகல்.
2. நாடு சாதாரண நிலைக்குவரும்வரை இடைக்கால அரசு ஒன்றை அமைத்தல்.
3.நாடாளுமன்றத்தை கலைத்தல்.
அப்போது அதிபரை பதவி விலகுமாறு தன்னால் கோர முடியாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இதனால் முடிவு ஏதும் எட்டப்படாமலேயே கட்சி தலைவர்கள் கூட்டம் முடிவடைந்துள்ளது.
மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் பதற்றம்; ஊரடங்கு உத்தரவை மீறி இரவிலும் போராட்டம்
அரசின் பெரும்பான்மையை பரிசோதிப்பதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் மன நிலையை அறிவதற்கும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்குமாறு இலங்கை சட்ட அமைச்சர் மைத்திரி குணவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன், தேசிய பட்டியல் மூலம் 25 நிபுணர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி, நெருக்கடி நிலை தீரும்வரை, அவர்களின் வழிகாட்டலுடன் ஆட்சியை முன்னெடுக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக தற்போதைய நாடாளுமன்றில் உள்ள 25 பேர் பதவி விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்