பெங்களூரு:புதிய ‘பில்லிங்’ முறை பின்பற்றப்படுவதால், கடைகளுக்கு மதுபானம் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் கர்நாடக மதுபான கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில கடைகளில் ‘நோ ஸ்டாக்’ போர்டு மாட்டப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கே.எஸ்.பி.சி.எல்., என்ற கர்நாடக மாநில மதுபான வாரியம், அனைத்து மதுக்கடைகளுக்கும் தினமும் ஒரு முறை மதுபானம் வினியோகம் செய்கிறது.சமீப நாட்களாக கே.எஸ்.பி.சி.எல்., நிறுவனத்தில் சரக்கு வினியோகத்திற்கான பில் போடுவதற்கு, ‘வெப் இன்டென்டிங்’ என்ற புதிய சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே இருந்த சாப்ட்வேர் மாதிரி அது இல்லாமல், ஊழியர்களுக்கு அது சற்று சிரமம் அளிக்கிறது. அதனால் பழைய படி வேகமாக பில் போட முடியவில்லை.இதனால் மொத்த விலை கடை, பார் மற்றும் ரெஸ்டாரன்ட், மதுக்கடை போன்றவற்றுக்கு சில நாட்களாக மதுபானம் வினியோகம் செய்ய முடியவில்லை.
கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான மதுபான கடைகளில் நேற்று முன்தினம் முதலே மதுபானம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று சில கடைகளில், ‘நோ ஸ்டாக்’ போர்டு போடப்பட்டுள்ளது.இதே நிலை தொடர்ந்தால் அனைத்து கடைகளிலும் மதுபானம் காலியாகும் சூழ்நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.எனவே மதுக்கடை ஊழியர்கள், உரிமையாளர்கள், ‘புதிய பில்லிங் சிஸ்டத்தோடு, பழைய முறையையும் கடைப்பிடிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆனால் கே.எஸ்.பி.சி.எல்., நிறுவனத்தினர் ஏற்கவில்லை. எனவே பழைய முறையை வலியுறுத்தி பெங்களூரு பெடரேஷன் ஆப் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் அமைப்பினர் இன்று கர்நாடகாவில் உள்ள அனைத்து கே.எஸ்.பி.சி.எல்., டிப்போ முன்பும் போராட்டம் நடத்த முடிவு செய்துஉள்ளனர்.
Advertisement