மதுரை: சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வருமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக பாஜக அழைப்பு விடுத்துள்ளது. அவரும் வர சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடக்கிறது. திருக்கல்யாணம், சித்திரைத் தேர்த்திருவிழா, அதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிகள் மிகுந்த விஷேசமானது. இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பங்கேற்க வருமாறு, புதுடெல்லியில் அவரை சந்தித்து தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து ஸ்ரீனிவாசகன் கூறுகையில், ”மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தேன். மதுரையில் வரும் ஏப்ரல் 16 அன்று அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு நிதியமைச்சர் வருகை தரவேண்டும் என்று மதுரை மக்களின் சார்பில் அழைப்பு விடுத்தேன். அப்போது அவர், தான் மதுரையில் பிறந்தவர் என்றும், சித்திரைத் திருழாவை அறிவேன், அழகர் விழாவில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கிறது என்றும். ஓரிரு நாட்களில் என்னால் வர முடிந்தால் உறுதி செய்கிறேன் என்றும் அவர் கூறினார்” என்றார்.