மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி தரும்படி, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம், முதல்வர் பசவராஜ் பொம்மை டில்லியில் நேற்று வலியுறுத்தினார்.இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று டில்லி சென்றார். அவருடன் அமைச்சர்கள் கோவிந்த் கார்ஜோள், சுனில்குமார் ஆகியோரும் சென்றனர்.
மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தார். அப்போது மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கும்படி வலியுறுத்தினார்.கர்நாடக சட்டசபையில் தமிழகத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அப்போது விளக்கப்பட்டது.மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்து, மின்சாரம் உற்பத்திக்கு பயன்படுத்தும் பழுப்பு நிலக்கறியை உடனடியாக வினியோகிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
மாநிலத்துக்கான ஜி.எஸ்.டி., வரித்தொகை வழங்குவது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும், சங்கொள்ளி ராயண்ணா ராணுவ பள்ளி ஆரம்பிப்பது தொடர்பாக ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கையும் இன்று சந்திக்க திட்டமிட்டுள்ளார்.இதே வேளையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தேசிய அமைப்பு பொது செயலர் சந்தோஷ் ஆகியோரை இன்று சந்தித்து பேசுகின்றனர்.
– நமது நிருபர் –
Advertisement