புதுடெல்லி: குற்றவாளிகள் மற்றும் கைது செய்யப்படும் நபர்களின் கை விரல் ரேகை உள்ளிட்ட அடையாளங்களை பதிவு செய்வதற்கான குற்றவியல் நடைமுறை மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. மக்களைவையில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை (அடையாள) மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீதான விவாதத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், ‘‘குற்றவாளிகளின் அடையாளங்களை போலீசார் பெற அனுமதிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. இந்த அனுமதி தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அரசியல் போராட்டங்களின் போது கைது செய்யப்படுபவர்களின் டிஎன்ஏ மாதிரிகளையும் அவர்கள் பெற வாய்ப்புள்ளது. இது தனி மனித உரிமைக்கு எதிரானது. எனவே, மசோதாவை நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்,’’ என்றார். இதற்கு பதிலளித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘போராட்டத்தில் கைதாகும் அரசியல் கைதிகளின் அடையாளங்கள் சேகரிக்கப்படாது. இது யாருடைய தனி உரிமையும் மீறாது என உறுதி அளிக்கிறேன். என்றார். இதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.