“தமிழகத்தில் 45 சதவிகித மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் தனியார், சுயநிதி பள்ளிகளின் பிரதிநிதிகளை மாநிலக் கல்விக்குழுவில் சேர்க்க வேண்டும்” என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளது.
தமிழக அரசின் புதியக் கல்விக்கொள்கையை வடிவமைக்க மாநில அளவிலான குழுவை அறிவித்துள்ளது தமிழக அரசு. உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.முருகேசன் தலையிலான குழுவில் முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன், ஓய்வுபெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், யுனிசெப் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர்கள் துளசிதாஸ், ச.மாடசாமி, தலைமையாசிரியர் இரா.பாலு, அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் தங்கள் பிரதிநிதிகளையும் இக்குழுவில் சேர்க்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு எம்.ஆறுமுகம் தலைவராக இருக்கும் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு – (FePSA – Federation of Private School Associations) கோரிக்கை வைத்துள்ளது.
அவர்களது கோரிக்கை கடிதத்தில், “தமிழக அளவில் சங்கங்களின் கூட்டமைப்பின் கீழ் 30 -க்கும் மேற்பட்ட மாவட்ட சங்கங்களும், அதன் கீழ் 7000 தனியார், சுயநிதி பள்ளிகளும் உள்ளது.
இன்று இந்திய அளவில் கல்வியிலும் பொருளாதாரத்திலும் தமிழகம் தலைசிறந்து விளங்குவதற்கு மிக மிக முக்கிய பங்காற்றி வருவது தனியார் சுயநிதி பள்ளிகளே.
தமிழகத்தில் உள்ள சுமார் 140 லட்சம் பள்ளி மாணவர்களில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள், அதாவது 45 சதவிகிதத்துக்கு மேல் தனியார் சுயநிதி பள்ளிகளில் படித்து வருபவர்களே.
அரசின் செலவினத்தை குறைத்து தரமான கல்வியை வழங்கி, தமிழகத்தை தலைநிமிர வைத்ததில் தனியார் சுயநிதி பள்ளிகளின் பங்கு முக்கியமானது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தனியார் சுயநிதி பள்ளிகளை தமிழக அரசு சரியாக கண்டுகொள்ளவில்லை. தமிழக வளர்ச்சியில் பெரிய பங்காற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு உரிய முக்கியத்துவம் தராததும், அவற்றுக்கு வேண்டிய உதவிகளை செய்யாமல் இருப்பதோடு மட்டுமில்லாமல், ஏற்கனவே இருந்த சில உரிமைகளையும் பறிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதேபோல் தொடர்ந்து தனியார் சுயநிதி பள்ளிகள் ஓரங்கட்டப்பட்டால் தமிழகமும் மிக விரைவில் பீகார், உத்திரபிரதேசம் போல் மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.
தற்போது தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மாநில கல்விக் கொள்கை குழுவில் தனியார் சுயநிதி பள்ளிகளின் சார்பாக பள்ளி தாளாளர்களையோ, பள்ளி சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளையோ நியமிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
65 லட்சம் மாணவ மாணவியர் பயிலும் தனியார் சுயநிதி பள்ளிகளின் பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்காமல் எப்படி சரியான கல்விக் கொள்கைகளை வகுக்க முடியும்?
ஆகவே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநில கல்விக் கொள்கைக் குழுவில், தனியார் சுயநிதி பள்ளிகள் சார்பாக குறைந்தது 3 பிரதிநிதிகளை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்” என முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.