தருமபுரி: ”தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடு, 23-ஆம் புலிகேசி திரைப்பட கதைபோல உள்ளது” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
தருமபுரியில் அமமுக நிர்வாகிகள் இல்ல விழாக்கள் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்க இன்று தருமபுரி வந்தார். நிர்வாகிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறியது: “அதிமுக – அமமுக கட்சிகளை இணைப்பது தொடர்பான பேச்சுக்கள் காற்று வாக்கில் வந்து கொண்டிருப்பவைதான். அதைப்பற்றி நான் எதுவும் சொல்லவில்லை.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதுதான் அமமுக-வின் குறிக்கோளும், லட்சியமும். அவரது ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைப்போம். தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடு ஆகியவை 23-ம் புலிகேசி திரைப்பட கதைபோல உள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, சொத்துவரி 150 சதவீதம் வரை உயர்வு போன்ற நடவடிக்கைகள் மூலம், தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு தண்டனையை வழங்கியுள்ளது.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது. முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம் சென்றதன் நோக்கம் விரைவில் வெளியில் வரும். “இரட்டை இலை” சின்னம் தொடர்பான வழக்கில் என்னிடம் விசாரிக்க அமலாக்கத் துறை முறையாக சம்மன் அனுப்பினால் கண்டிப்பாக நான் விசாரணைக்கு ஆஜராவேன். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக மக்களுக்கு ஆதரவாக அமமுக குரல் கொடுத்து வந்தது. தற்போதும் மேகதாது அணையை அமமுக தொடந்து எதிர்க்கும்” என்று தினகரன் கூறினார்.