புதுடெல்லி: டெல்லியின் குடிநீர் வாரியத்தில் முஸ்லிம் பணியாளர்களுக்கு 2 மணி நேரம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இது, ஆம் ஆத்மியின் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அரசின் ரம்ஜான் சலுகையாகக் கருதப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 3 முதல் ரம்ஜான் நோன்பு 30 நாட்களுக்காகத் துவங்கி நடைபெறுகிறது. இந்த நாட்களில் பெரும்பாலான முஸ்லிம்கள் சூரியன் உதயத்திற்கு முன் முதல் அஸ்தமனம் வரை குடிநீரும் அருந்தாமல் நோன்பு இருப்பது வழக்கம்.
ரம்ஜான் பண்டிகை வரை நீட்டிக்கும் இந்த நோன்பு நாட்களில் முஸ்லிம்கள் சற்று களைப்படைந்து விடுவதும் உண்டு. இதனால், அவர்களுக்கு சலுகை அளிக்கும் விதத்தில் அன்றாடம் 2 மணி நேரம் ஓய்வை, டெல்லி குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
முஸ்லிம்களுக்கு மட்டுமான இந்த சலுகையை டெல்லியின் குடிநீர் வாரிய அலுவலகம் அறிவித்துள்ளது. இதைப் பெறும் முஸ்லிம்களால் அன்றாட பணிகள் தடைபடக் கூடாது எனவும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இதுபோன்ற சலுகைகள் முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மற்றும் முஸ்லிம்களால் நடத்தப்படும் தனியார் நிறுவனங்களில் அளிக்கப்படுவது உண்டு. இதனால், முதல்வர் கேஜ்ரிவால் அரசின் இந்த சலுகைக்கு முஸ்லிம்கள் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது.