யூடியூப் சேனல்களை முடக்கிய ஒன்றிய அரசு! என்ன காரணம்?

உண்மைக்கு மாறாக செய்திகளை பரப்புவதாகக் கூறி யூடியூப் சேனல்கள், சமூக வலைத்தள கணக்குகள், ஊடக நிறுவனங்கள் மீது ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. சில நாள்களுக்கு முன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல செய்தி தொலைக்காட்சி இதே காரணங்களுக்காக முடக்கப்பட்டது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பின்னர், ஊடகத் துறையினர் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அந்த சேனல் மீட்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது 22 யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. இதில் நான்கு சேனல்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முடக்கப்பட்ட யூடியூப் சேனல்களில், சுமார் 260 கோடி பேர் பார்வையாளர்களாக இருந்துள்ளனர் என அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், மூன்று ட்விட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு, ஒரு செய்தி இணையதளம் ஆகியவையும் முடக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் மருந்து வேலை செய்கிறது! அம்சமான ஆப்ஷன்களை அறிமுகம் செய்யும் ட்விட்டர்!

அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், “சமீபத்திய தடை உத்தரவு மூலம், 18 இந்திய மற்றும் நான்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட யூடியூப் செய்தி சேனல்கள் தடுக்கப்பட்டுள்ளன. இவைகள் இந்திய இறையாண்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகளை மக்களிடத்தில் கொண்டு செல்கின்றனர்.

“இந்திய ஆயுதப் படைகள், ஜம்மு காஷ்மீர் போன்ற பல்வேறு விஷயங்களில் போலியான செய்திகளை இந்த யூடியூப் சேனல்கள் பகிர்ந்துள்ளன. மேலும், பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் சில சமூக ஊடக கணக்குகளில் இருந்து வெளியிடப்பட்ட சில இந்தியாவுக்கு எதிரான தகவல்களும் இதில் அடங்கும்.

ஷாக் கொடுத்த வாட்ஸ்அப் – இதனால தான் உங்க கணக்கு முடக்கப்பட்டிருக்கு!

போலி செய்திகள் பரப்புவதாக தகவல்

உக்ரைன் போர் குறித்தும் தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. இரு நாடுகள் உறவில் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக இந்த செய்திகள் இருக்கிறது. இந்த யூடியூப் சேனல்களால் பிற நாடுகளுடனான இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தடுக்கப்பட்ட இந்திய யூடியூப் சேனல்கள், சில செய்தி சேனல்களின் டெம்ப்ளேட்கள், லோகோக்கள், அவற்றின் செய்தி அறிவிப்பாளர்களின் படங்கள் உள்பட அனைத்தையும் பயன்படுத்தி, போலி செய்திகளை உண்மை செய்தியாக பார்வையாளர்களுக்கு காட்ட முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

2021ஆம் ஆண்டில் இருந்து இந்திய இறையாண்மைக்கு களங்கள் விளைவிக்கும் வகையில் செயல்படும் யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு தொடர்ந்து முடக்கி வருகிறது. இதுவரை இணையதளம், சமூக வலைத்தளங்கள் கணக்குகள் உள்பட 77 யூடியூப் சேனல்கள் என பல்வேறு வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக 22 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்தெந்த சேனல்கள் முடக்கப்பட்டது என்பது குறித்த தகவலை அரசு இன்னும் வெளியிடவில்லை.

அடுத்த செய்திகார்ல் சீஸ் லென்ஸுடன் வெளியான புகைப்படங்கள் – Vivo X Note லீக்ஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.