ருமேனியாவில் ரஷ்ய தூதரகம் மீது மர்ம நபர் ஒருவர் காரை மோதி வெடிக்கச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் யார், இது விபத்தா அல்லது திட்டமிட்ட சம்பவமா என்பன தொடர்பான விசாரணைகள் தொடங்கியுள்ளன.
உக்ரைனின் அண்டை நாடு ருமேனியா. உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்குப் பின்னர் ருமேனியாவுக்கு மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலையில் ருமேனிய தலைநகர் புச்சாரஸ்டில் உள்ள ரஷ்ய தூதரகம் வாயில்கதவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் காரில் இருந்த நபர் உயிரிழந்தார். மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்ததால், அங்கிருந்த வாயில் கதவு எரியத் தொடங்கியது. தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் ரஷ்ய தூதரகத்தில் வாயில் கதவு சேதமடைந்தது. காரில் வந்த நபரும் உடல் கருகி இறந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் விபத்தா, இல்லை திட்டமிட்ட தாக்குதலா என்ற விசாரணைகளை ருமேனிய அரசு முடுக்கிவிட்டுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கியதிலிருந்தே, ரஷ்ய தூதரங்கள் முன்னால் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தாக்குதல்கள் உலகில் வாடிக்கையாகிவிட்டது. அதுவும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள ரஷ்ய தூதரகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
அண்மைக்காலமாகவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் தேசத்தில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகளை திருப்பியனுப்பி வருகின்றன. சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு ரஷ்யா போரை நிறுத்தாததைக் கண்டித்து அந்நாடுகள் இத்தகைய நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய தூதரக அதிகாரிகள் 10 பேரை வெளியேறச் சொல்லி அண்மையில் ருமேனியா அரசும் உத்தரவிட்டது. இந்தச் சூழலில் தான் ருமேனியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் மீது இத்தாக்குதல் நடந்துள்ளது.