டேராடூனைச் சேர்ந்த மூதாட்டி தனக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பெயருக்கு உயில் எழுதியுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் வசித்து வருபவர் புஷ்பா முன்ஜியால். திருமணம் செய்துகொள்ளாத 79 வயதான மூதாட்டியான இவர் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தனக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். வெவ்வேறு வங்கிகளில் 16 முதலீடுகளில் வைப்புத் தொகையாக உள்ள ரூ.18.34 லட்சம், ரூ.5.63 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை ராகுல் காந்திக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.
கடந்த மாதம் 9-ம் தேதி டேராடூனில் உள்ள நீதிமன்றத்தில் சாட்சிகள் முன்னிலையில், தனது சொத்துக்களை ராகுல் காந்தி பெயருக்கு உயில் எழுதிக் கொடுத்தார். அந்த உயிலை நேற்று முன்தினம் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏ.வுமான பிரீத்தம் சிங்கிடம் அவரது வீட்டில் கட்சியின் டேராடூன் நகரத் தலைவர் லால் சந்த் சர்மா முன்னிலையில் புஷ்பா முன்ஜியால் ஒப்படைத்தார்.
இதுகுறித்து புஷ்பா முன்ஜியால் கூறுகையில், ‘‘நேரு- காந்திகுடும்பம் நாட்டுக்காக தியாகங்கள் செய்துள்ளது. ராகுல் காந்தியின் சிந்தனைகளாலும் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டேன். தனது முன்னோர்கள் வழியில் ராகுல் காந்தி நாட்டுக்கு பணியாற்றி வருகிறார். எனவே, எனக்கு பிறகு எனது சொத்துகளை ராகுல் காந்தியின் பெயருக்கு எழுதி வைக்க முடிவு செய்தேன். எனது காலத்துக்குப் பிறகு எனது ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் ராகுல் காந்திக்கே சேரும்’’ என்றார்.