வரதட்சணை
வேண்டாம் என்று முற்றிலுமாக மறுப்பது அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழ்கிறது. அது வேண்டாமே என்று சொல்லத் தயங்குபவர்கள் ‘உங்களால முடிஞ்சதை உங்க பொண்ணுக்கு பண்ணுங்க’ என்று சொல்லி வருகின்றனர். இதற்கு மத்தியிலும், மணமகனின் கல்வித்தகுதியைச் சுட்டிக்காட்டி வரதட்சணையை விடாப்பிடியாக கேட்டு வாங்குபவர்கள் இருக்கின்றனர். சந்தையில் பேரம் பேசுவது போல, மாப்பிள்ளையின் தகுதியைக் கோடிட்டுக் காண்பித்து வரதட்சணை பட்டியலை வாசிப்பது இவர்களது வழக்கம். மணப்பெண் படித்து நல்ல வேலையில் இருந்தால், அவரது சம்பளத்தைக் கணக்கில் கொண்டு வரதட்சணையின் அளவு குறையும். சமூகத்தின் நடைமுறைகள் குறித்து பட்டிமன்றங்களில் பேசும்போது, பொதுவிடங்களில் கும்பலாக கூடி அரட்டையடிக்கும்போதோ இப்படி கருத்து தெரிவித்திருந்தால் விட்டுவிடலாம். ஆனால், இதே தொனியில் அழுத்தம்திருத்தமாகப் பாடப்புத்தகத்தில், அதுவும் உயர்கல்வி பயில்வோருக்கு இக்கருத்துகள் பயிற்றுவிக்கப்பட்டால் என்னவாகும். எத்தகைய பின்னூட்டத்தை பொதுவெளியில் எதிர்கொள்ளும்?
டி.கே.இந்திராணி எழுதிய ’செவிலியர்களுக்கான சமூகவியல் பாடப்புத்தக’த்தில் (Textbook of Sociology for Nurses) இடம்பெற்றிருக்கும் வரதட்சணைக்கு ஆதரவான வரிகள் தற்போது அத்தகைய சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றன. பள்ளி மற்றும் கல்லூரிப் பாடங்களில், தேர்வுகளில் பொதுச்சமூகத்தின் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கு, சமநிலைக்கு எதிரான கருத்துகள் இடம்பெறுவது இது முதன்முறையல்ல; வரதட்சணையை பெருமைக்குரிய விஷயமாக உருமாற்றம் அடைந்திருக்கும் காலகட்டத்தில், அதுவே ஒரு பெண்ணின் நல்வாழ்வுக்கான அடிப்படை தகுதியாகச் சொல்ல முனைவது நிச்சயம் சமூக முன்னேற்றத்தினை இழுத்துப் பிடித்து தடுத்து நிறுத்தும் செயலாகும்.
வரதட்சணையைக் குறைக்கவா கல்வி?!
”வரதட்சணை சுமையின் காரணமாகவே பல பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகள் கல்வி பயில வைத்தனர். அந்த பெண்கள் கல்வி கற்று பணிக்குச் செல்லும்போது வரதட்சணையின் அளவு குறையும். இது, ஒரு மறைமுகமான சிறப்பம்சம்’ என்ற அர்த்தம் தாங்கிய வரிகள் இளங்கலை நர்சிங் படிப்புக்கான பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
இந்திராணி எழுதிய இப்புத்தகம் குறித்து, கடந்த 4ஆம் தேதியன்று சிவசேனா மக்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதிய பிறகே இவ்விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இழிவான, பிரச்சனைக்குரிய இவ்வார்த்தைகள் பாடத்திட்டத்தில் கலந்திருப்பது இந்திய நாட்டுக்கும் அரசியலமைப்புக்குமான அவமானம் என்று அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக இதனை பாடத்திட்டத்தில் இருந்து அகற வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட வரி மட்டுமல்லாமல் ‘அழகற்ற தோற்றமுடைய பெண்கள் கவர்ச்சிகரமான வரதட்சணையுடன் சிறப்பான அல்லது அழகற்ற தோற்றமுடைய ஆண்களை திருமணம் செய்துகொள்ள முடியும்’, ‘ஒரு புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கு வரதட்சணை உதவும்’ என்பது போன்ற பல கருத்துகள் இப்புத்தகத்தில் ஆங்காங்கே இடம்பெற்றிருப்பது சமூகவலைதள பயனர்களால் தற்போது கவனப்படுத்தப்பட்டுள்ளது. இது, ஒட்டுமொத்தமாகப் பெண் சமூகத்தையே இழிவுபடுத்தும் வார்த்தைகள் என்ற நோக்கிலும் எதிர்ப்பு பலமாகியுள்ளது. இப்புத்தகம் மட்டுமல்லாமல் இந்திராணியின் வேறு சில புத்தகங்களும் கூட இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
வரதட்சணையை ஒழிக்கவே முடியாது என்று யாரோ ஒருவர் கூறுவதை நம்மால் தடுக்க முடியாது. அவரது பேச்சும் செயல்பாடும் ஒருவரை புண்படுத்தினால் மட்டுமே அது குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், ஒரு தனியறையிலோ அல்லது கும்பலாகவே மேற்கண்ட கருத்து வெளிப்படுத்தப்படவில்லை. நாளைய இந்தியாவை உருவாக்கும் ஒரு தலைமுறையின் கல்வியில் இத்தகைய நச்சு விதைக்கப்படுவது ‘வரதட்சணை ஒழிப்பு’ எனும் சமூக மேம்பாட்டு செயல்பாட்டை மேற்கொண்ட நம் முன்னவர்கள் பலரையும் ஒருசேர அவமானத்திற்குள் தள்ளுவதற்கு ஒப்பாகும். இந்த எண்ணம் பரவலாகச் சென்றடையும்போது, ’வரதட்சணை வாங்குவதில் தப்பில்லையே’ என்ற குரல் அதிகாரப்பூர்வமான அங்கீகாரத்தை தேடத் தொடங்கிவிடும்.
உடனடி நடவடிக்கை!
சம்பந்தப்பட்ட புத்தக ஆசிரியர், அதனை பதிப்பித்த ஜேபீ பப்ளிஷர்ஸ் எனும் நிறுவனம் தரப்பில் இருந்து, இதுவரை இவ்விவகாரம் பற்றி விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. ஆனால், மேற்கண்ட கருத்துகள் மற்றும் இது போன்ற கருத்துகள் தாங்கிய புத்தகங்கள் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது பயிற்சியளிக்கப்பட்ட செவிலியர்களுக்கான இந்தியக் கூட்டமைப்பு. இவ்விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்தாலும், பாடத்திட்டத்தை கவுன்சில் தயாரித்தாலும் அதிலுள்ள கருத்துகளுக்கு பொறுப்பாக முடியாது என்றும் இக்கூட்டமைப்பின் தேசியத் தலைவரான டாக்டர் ராய் கே ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்சியின் மக்களவை உறுப்பினர் சுட்டிக்காட்டிய பிறகே இவ்விஷயத்தில் இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்புத்தகங்களுக்கு ஒப்புதல் வழங்கும் குழு இது போன்ற கருத்துகளை எப்படி அனுமதித்தது? இந்த கேள்விக்கு யார் பதிலளிப்பது?
தொடரும் கொடுமைகள்!
வரதட்சணை கொடுமைகளால் உடல் மற்றும் மனரீதியான காயங்கள் ஒருபுறமிருக்க, அதனால் உயிர்ப்பலி நிகழ்வதும் தொடர்கதையாகவே உள்ளது. கடந்த ஆண்டு ஜுன் மாதம் கேரளாவில் ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா தற்கொலை செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகின. உதவி மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வந்த அவரது கணவர் கிரண் குமார் மற்றும் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு செய்த கொடுமைகளால் அவர் அம்முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டது. தனக்கு பெண் வீட்டார் தந்த கார் பிடிக்கவில்லை என்றும், அதற்குப் பதிலாக பத்து லட்சம் ரூபாய் தர வேண்டுமென்றும் கிரண் தரப்பு சொன்னது இவ்விவகாரத்தின் பின்னணியாகச் சொல்லப்பட்டது.
இது போன்ற செய்திகளைத் தேடினால், குறைந்தபட்சம் தினமொரு பாதிப்பைக் கண்டறிய முடியும். பெரும்பாலும் இவற்றில் மாப்பிள்ளை வீட்டார் நன்கு படித்த, சமூக அந்தஸ்தில் இருக்கிற, நல்ல வசதியான பின்புலம் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். மேற்கண்ட விஸ்மயா வழக்குக்கான புகார் கூட பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் திரும்பப் பெறப்பட்டது. சட்ட நடைமுறைகளுக்கு எதிராக ‘பஞ்சாயத்து’ பேசி இம்முடிவு அடையப்பட்டிருக்கிறது என்பதே இதன் பின்னிருக்கும் உண்மை. இது போல எத்தனையோ உதாரணங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்தான், எரிகின்ற தீயைத் தன் எழுத்துக்களால் மேலெழச் செய்திருக்கிறார் இந்திராணி.
குறிப்பிட்ட சமூகம் குறித்து இழிவான கருத்துகளை வெளியிட்டது, தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், தலைவர்கள் குறித்து தவறாகச் சித்தரித்தது என்று இதற்கு முன்னரும் பாடப்புத்தகங்களில் இடம்பெற்ற கருத்துகள் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. அவை குறிப்பிட்ட நபர்கள் அல்லது குழுவின் மீது அதற்கு எதிரானவர்களின் வன்மமாகவே எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், நாகரிகத்தின் பெயரால் நாளும் வளர்ச்சியை நோக்கும் சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட அம்சங்களுக்கும் வழக்கங்களுக்கும் உயிர் கொடுக்கும் இது போன்ற செயல்பாடுகளை எப்படி எடுத்துக்கொள்வது? எதிர்காலத் தலைமுறையின் எண்ணங்களை மடைமாற்றுவதற்கான திட்டமிட்ட யுக்தியாகவே இது கருதப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட புத்தக ஆசிரியர், பதிப்பாளர் தாண்டி இந்த பாடப்புத்தகத்திற்கு அங்கீகாரம் வழங்கியவர்களும் கூட இவ்விவகாரத்தில் கட்டாயம் பதில் சொல்லியாக வேண்டும்!
விமர்சகர்
உதய் பாடகலிங்கம்