வாக்கு வங்கி அரசியலால் என்ன மாதிரியான ஆபத்துகள் உள்ளன என்பதை மக்களுக்கு நாங்கள் நிரூபித்துள்ளோம் என்று பிரதமர்
நரேந்திர மோடி
கூறியுள்ளார்.
பாஜகவின் நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும்
பாஜக
சார்பில் பூத், தாலுகா, மாவட்ட அளவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பாஜக அரசு மேற்கொண்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 7ம் தேதி முதல் 15 நாட்களுக்கு சமூக நீதி வாரமாகவும் இதை பாஜக கொண்டாடவுள்ளது. இந்த நிலையில் கட்சித் தொண்டர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், 3 காரணங்களால் இந்த நிறுவன தினம் முக்கியத்துவம் பெறுகிறது. முதலில் நாம் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடப் போகிறோம். இது மிகப் பெரிய காரணம். 2வது உலக அளவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவுக்கான புதிய வாய்ப்புகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டுள்ளன.
3வது காரணம், பாஜகவின் டபுள் என்ஜிந் அரசு, 4 மாநிலங்களில் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது. 30 வருடங்களுக்குப் பிறகு நமது கட்சி ராஜ்யசபாவில் 100 உறுப்பினர்கள் என்ற அளவை எட்டியுள்ளது. இதற்கு முன்பு ஒரு கட்சியை, ஒரு ஆட்சியை மக்கள் தொடர்ந்து ஏற்று ஆதரித்து வந்தனர். ஆனால் அந்த ஆட்சியும் கட்சியும் மக்களுக்காக எதையும் செய்யவில்லை.
இன்று மாறி வரும் சூழல்களைப் பார்த்து நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பெருமையுடன் உள்ளனர். மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எந்த மிரட்டலுக்கும் பணியாத, பயப்படாத, தைரியத்துடன் நிற்கும் இந்தியாவை இன்று உலகம் காண்கிறது. தனது நலன்களுக்காக உறுதியாக நிற்கும் இந்தியாவை உலகம் பார்க்கிறது. உலகம் இன்று இரண்டு கூறுகளாக பிரிந்து நிற்கும்போது இந்தியா மட்டும் மனித குலத்துக்காக உறுதியாக பேசும் நாடாக தலை நிமிர்ந்து நிற்கிறது.
இன்று இந்தியா 180 கோடி கொரோனா வாக்சினை செலுத்தியுள்ளது. இந்த கஷ்டமான சூழ்நிலையிலும் கூட இந்தியா 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. வெறும் வயிற்றுடன் படுக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசு ரூ. 3.5 லட்சம் கோடியை செலவிட்டுக் கொண்டுள்ளது.
சில கட்சிகள் வாக்கு வங்கி அரசியலை பல காலமாக மேற்கொண்டு வந்தனர். சிலருக்கு மட்டும் வாக்குறுதிகளை அளித்து வந்தனர். பலரை பல காரணங்களுக்காக ஏங்க வைத்தனர். பாரபட்சமான, ஊழல் மிகுந்த நிர்வாகம்தான் இந்த வாக்கு வங்கி அரசியலால் நமக்குக் கிடைத்த பலன்கள்.இதை பாஜக வெற்றிகரமாக எதிர்கொண்டு முறியடித்ததோடு மட்டுமல்லாமல், மக்களுக்கும் இந்த வாக்கு வங்கி அரசியலின் விபரீதத்தையும் புரிய வைத்துள்ளது என்றார் பிரதமர் மோடி.
அடுத்த செய்தி64% டெல்லிக்காரர்கள் “கவுச்சி” சாப்பிடுகிறார்கள்.. நவராத்திரி தடை சரிப்பட்டு வருமா?