வாஷிங்டன்:சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து உருவாக்கிய ‘ஆகஸ்’ என்ற பாதுகாப்பு கூட்டணி வாயிலாக ‘ஹைப்பர்சோனிக்’ ஏவுகணை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பசிபிக் கடல் பகுதியில் சீன ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகள் இணைந்து ‘ஆகஸ்’ என்ற பாதுகாப்பு கூட்டணியை கடந்த ஆண்டு செப்டம்பரில் உருவாக்கின.
எந்தவொரு ஏவுகணை தடுப்பு ஆயுதத்தாலும் இடைமறிக்க முடியாத அளவுக்கு வேகமாக பாயக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் சீனா மற்றும் ரஷ்யா ஈடுபட்டு உள்ளன. ரஷ்யா இந்த ஏவுகணை சோதனையில் கடந்த ஆண்டே ஈடுபட்டதை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.உக்ரைன் போரில் ரஷ்யா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. இதையடுத்து அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய பாதுகாப்பு கூட்டணியான ‘ஆகஸ்’ அமைப்பு சார்பாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்க மூன்று நாட்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
Advertisement