பான்டங்:இந்தோனேஷியாவில் உள்ள இஸ்லாமிய உறைவிடப் பள்ளியில், 13 மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பள்ளியின் தலைமையாசிரியருக்கு துாக்கு தண்டனை விதித்து தீர்ப்புஅளிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா நகரில், இஸ்லாமிய உறைவிட பள்ளி ஒன்று உள்ளது.இங்கு படிக்கும், 11-14 வயதுடைய சிறுமியரை பலாத்காரம் செய்ததாக, அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஹெர்ரி விராவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த 2016ல் இருந்து, அவர் மாணவியரிடம் தொடர்ந்து அத்துமீறியுள்ளார். இதில், ஒன்பது குழந்தைகளும் பிறந்துள்ளன. பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி, கடந்தாண்டு மே மாதம் வீட்டுக்குச் சென்ற போது, பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, போலீசார் விசாரித்து வந்தனர். கடந்த நவம்பரில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தான், இந்த விஷயம் மக்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, ஹெர்ரி விராவன் கைது செய்யப்பட்டார். பான்டங்கில் உள்ள விசாரணை நீதிமன்றம், அவரை ஆயுள் முழுதும் சிறையில் அடைக்கும்படி, கடந்த பிப்ரவரில் தீர்ப்பு அளித்தது.தீர்ப்புஇதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ஹெர்ரி விராவனுக்கு மரண தண்டனை விதித்து, தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும், அவருக்கு சொந்தமான சொத்துக்களை விற்று, பாதிக்கப்பட்ட மாணவியருக்கு நிவாரணமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமியருக்கு பிறந்த குழந்தைகளை, அரசு இல்லத்தில் வைத்து பராமரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement