மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடைய உள்ள நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை இடையில் வேறு எந்த தேர்தல் நடைபெறாது என்ற சூழலில், தமிழகத்தில் திமுக அரசு ஏப்ரல் 1 முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரியை உயர்த்தியது. இதைக் கண்டித்து எதிர்க்கட்சியான அதிமுக சென்னை மற்றும் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மாநிலத்தின் தலைநகர் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், கட்சித் தொண்டர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சொத்து வரி உயர்வு திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மீறும் செயல் என்று கூறினார். “சொத்து வரி உயர்த்தியதை திரும்பப் பெறும் வரை நாங்கள் இந்தப் போராட்டத்தைத் தொடருவோம். இதுபோன்ற கொள்கைகள் தொடர்ந்தால் மக்கள் தெருக்களில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.” என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
2013 இல் முன்மொழியப்பட்ட பரிந்துரை உட்பட வரி உயர்வுக்கான பரிந்துரைகள் பல ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டன அல்லது முந்தைய அரசாங்கங்கள் என்று மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்று கருதிய இந்த நடவடிக்கையை எடுக்க மறுத்ததால் வரி உயர்வு நிறுத்தப்பட்டது. இருப்பினும், மு.க.ஸ்டாலின் நிர்வாகம் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் நிதி நிலையை மீண்டும் உயிர்ப்பிக்கும் பெரிய நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்தது.
அதிக பணவீக்கம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் பங்கில் சரிவு காரணமாக இந்த வரி உயர்வு அவசியமானது என்று அறிக்கைகள் மூலம் விளக்கப்பட்டது.
2021-22 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் திருத்தப்பட்ட வருவாய் பற்றாக்குறை முந்தைய நிதியாண்டில் ரூ.58,692.68 கோடியிலிருந்து ரூ.55,273 கோடி வரைஇ இருந்தது. சமீபத்திய பட்ஜெட்டில், வரி வசூலை அதிகரிப்பதன் மூலம் வருவாய் பற்றாக்குறை மேலும் ரூ.52,781.17 கோடியாக குறையும் என நம்பப்படுகிறது. சமீபத்திய வரி மாற்றம் – சென்னை மாநகராட்சியில் கடைசியாக 1998-ல் நடத்தப்பட்டது. இந்த வரி உயர்வு உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் வருவாயைக் கொண்டு வரும். சென்னை மாநகராட்சிக்கு மட்டும் கூடுதலாக ரூ. 800 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாறுபட்ட வரி உயர்வு
சென்னையின் முக்கிய பகுதிகளில், 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு வீடுகள் 50 சதவீதம் கூடுதலாக சொத்து வரி செலுத்த வேண்டும். மற்ற நகர மாநகராட்சிகள் மற்றும் 2011-க்குப் பிறகு கிரேட்டர் சென்னை மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு இது 25 சதவீதம் உயர்வு. இந்த வரி உயர்வைத் தொடர்ந்து, ஒரு 600 சதுர அடி வீட்டில் வசிப்பவர்கள் ரூ.810ல் இருந்து ரூ.1,215 வரி செலுத்த வேண்டும். மற்ற நகரங்களில் உள்ள இதேபோன்ற வீட்டின் சொத்து வரியை விட இது குறைவாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
இதே அளவுள்ள வீட்டில் வசிப்பவர்கள் மும்பையில் ரூ.2,157, பெங்களூரில் ரூ.3,464, கொல்கத்தாவில் ரூ.3,510 வரி செலுத்துகின்றனர்.
ஏப்ரல் 1ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பிறப்பித்த உத்தரவின்படி, சென்னையின் முக்கியப் பகுதிகளில் 600-1,200 சதுர அடியில் உள்ள வீடுகளுக்கு 75 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி வீடுகளுக்கு 100 சதவீதமும், மேலும் 1,801 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட வீடுகளுக்கு 150 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
சென்னையின் மையப் பகுதிகளில் உள்ள வணிகக் கட்டமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளும் 150 சதவீத வரி உயர்வை சந்திக்கின்றன. கல்வி நிறுவனங்கள் சுமார் 100 சதவீதம் சொத்து வரி செலுத்த வேண்டும்.
மாநிலத்தில் உள்ள 77.87 லட்சம் வீடுகளில் 7 சதவீதம் வீடுகள் மட்டுமே 100 சதவீதம் மற்றும் 150 சதவீதம் வரி உயர்வின் கீழ் வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிட்டத்தட்ட பாதி வீடுகள் 25 சதவீத உயர்வை எதிர்கொள்ளும் என்று கூறினார்.
நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு, ஏப்ரல் 2ம் தேதி கூறுகையில், சொத்து வரியை உயர்த்தும் முடிவு குறித்து மன்னிப்பு கேட்கவில்லை. இது 15-வது நிதிக் குழுவின் வழிகாட்டுதல்களின்படி மற்றும் மத்திய நிதியைப் பெறுவதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
அதே நாளில், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த திமுக அரசாங்கத்தின் சொத்து வரி உயர்வு நடவடிக்கை வெறும் டிரெய்லர்தான் என்று எச்சரித்தார். பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு பண உதவி வழங்குவதில் அரசு நிர்வாகம் தவறிவிட்டதாகவும், “இந்த சொத்து வரி உயர்வு சட்டமன்றத் தேர்தலில் திமுகவைத் தேர்ந்தெடுத்ததற்கான வெகுமதியாக இருக்கலாம்” என்றும் கிண்டலாகச் சுட்டிக்காட்டிய பழனிசாமி, “இதுபோன்ற பல பம்பர் பரிசுகள் வரும் நாட்களில் மக்களுக்குக் காத்திருக்கின்றன” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“