லண்டன் :
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற பரிணாம கொள்கையால் இன்றளவும் புகழ்பெற்றிருப்பவர், விஞ்ஞானி சார்லஸ் டார்வின். இவர் கைப்பட எழுதிய 2 நோட்டு புத்தகங்கள், அவர் படித்த இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆனால், அவர் புத்தகங்கள் 22 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கிருந்து திருட்டுப்போய் விட்டன. இதுபற்றி பி.பி.சி. சிறப்பு செய்தி வெளியிட்டு, இவற்றை எடுத்தவர்கள் திரும்பத்தந்துவிடுமாறு உலகளாவிய வேண்டுகோளை 15 மாதங்களுக்கு முன்பு விடுத்தது.
இந்நிலையில், அந்த நோட்டு புத்தகங்கள், அவை வைக்கப்பட்டிருந்த அசல் நீல நீலப்பெட்டி, வெற்று பழுப்பு நிற உறை ஆகியவற்றை இளஞ்சிவப்பு பரிசுப்பையில் யாரோ கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் விட்டு விட்டு சென்றுள்ளனர். அதை விட்டுச்சென்றவர்கள், அந்த பல்கலைக்கழகத்தின் நூலகருக்கு, ஈஸ்டர் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பல்கலைக்கழக நூலகர் டாக்டர் ஜெசிகா கார்டினர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அவை பாதுகாப்பாக உள்ளன. நல்ல நிலையில் இருக்கின்றன. தங்கள் வீட்டில் உள்ளன” என குறிப்பிட்டார். சார்லஸ் டார்வின் பரம்பரை பற்றிய ஓவியத்தை உள்ளடக்கிய இந்த நோட்டு புத்தகங்கள் பல மில்லியன் பவுண்ட் மதிப்பு மிக்கவை ஆகும்.