புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும், 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. அந்த டாஸ்மாக் கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக மதுப் பழக்கத்திற்கு அடிமையாவதாகவும், குடும்பங்கள் சீரழிவதாகவும் பொதுமக்கள் புகார் எழுப்பினர். அதையடுத்து, அந்த டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், மக்கள் ஒன்று திரண்டு 2017, மே.20-ம் தேதி மாதர் சம்மேளன மாவட்டத் தலைவர் இந்திராணி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆலங்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த தற்போதைய அமைச்சர் மெய்யநாதனும் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்காத நிலையில், கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு அந்த இரண்டு கடைகளையும் மக்கள் அடித்து உடைத்துச் சூறையாடினர். அதன் பிறகு, அந்த இரண்டு டாஸ்மாக் கடைகளும் நிரந்தரமாக மூடப்பட்டன. இரண்டு கடைகளும் வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டன. இந்த நிலையில்தான், தற்போது போராட்டம் நடந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு கொத்தமங்கலத்தில் மீண்டும் ஏப்ரல் 5-ம் தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த அந்தப் பகுதி மக்கள் தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி வளர்மதி, தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் மன்மதன், மற்றும் சி.பி.ஐ கட்சியினர் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, “ரொம்ப நாள் மனுபோட்டும் நடவடிக்கை எடுக்கலை. பெரிய மக்கள் போராட்டத்துக்குப் பிறகு கடைகளை மூடி வேற இடத்துக்குக் கொண்டு போனாங்க. இடையில ஒரு முறை கொண்டு வர பார்த்தாங்க. நாங்க விடலை. இப்ப, அங்க எல்லாம் வியாபாரம் நல்லா ஓடலைன்னு மறுபடியும், ஒரு டாஸ்மாக் கடையை கொண்டு வந்திருக்காங்க. கண்டுக்காம விட்டா, இன்னொரு கடையும் கூடிய சீக்கரம் வந்திடும். எங்க ஊருக்கு டாஸ்மாக் கடைவேண்டாம். இப்போ, திறந்த கடையை நிரந்தரமா மூடணும். மூட நடவடிக்கை இல்லைன்னா பெண்களைத் திரட்டி மறுபடியும் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றனர்.
முன்னதாக, தி.மு.க எம்.எல்.ஏ-வும், தற்போதைய அமைச்சருமான மெய்யநாதன் தலைமை தாங்கிப் போராட்டத்தை நடத்தி டாஸ்மாக் கடையை மூட வைத்ததில் முக்கியப் பங்கு வகித்தார். இந்த நிலையில்தான், “இந்த முறை டாஸ்மாக் கடை இங்குக் கொண்டு வருவதற்கு அவர்தான் காரணம், அ.தி.மு.க ஆட்சியில், போராட்டத்தை நடத்தியவர், சத்தமில்லாமல் டாஸ்மாக் கடையைக் கொண்டு வந்துவிட்டார்.” எனப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்டனர்.
அதையடுத்து, சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் பரிந்துரையின் பேரில், தற்போது மாவட்ட ஆட்சியர் அந்த டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.