"80ஸ் கிட்ஸ்" பாஜக.. "2கே கிட்ஸ்" வரை ஊடுறுவியது எப்படி.. செம வளர்ச்சி!

பாரதிய ஜனதாக் கட்சி இன்று தனது நிறுவன தினத்தை அதாவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறது. ஜஸ்ட் 41 வயதேயாகும் பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்தால் எல்லோருக்கும் ஆச்சரியம்தான் வரும். அதேசமயம், சற்று உற்று நோக்கினால் இது ஏதோ அதிர்ஷ்டத்தால் வந்த வளர்ச்சி கிடையாது.. திட்டமிட்டு பாஜகவினர் கொடுத்து உழைப்பில் விளைந்த வளர்ச்சி என்பதை உணர முடியும்.

உண்மையில்
பாஜக
ஒரு “80ஸ் கிட்ஸ்”.. 1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பாஜக பிறந்தது. அதற்கு முன்பு இது பாரதிய ஜன சங்கமாக இருந்து வந்தது. அரசியல் பாதையில் புதிய அடியை எடுத்து வைப்பதற்காக பாஜகவாக இது உருமாறியது. அன்று முதலே திட்டமிட்டு ஒவ்வொரு விஷயத்தையும் செய்யத் தொடங்கியது பாஜக.

பாஜகவைப் பொறுத்தவரை, பிற கட்சிகளிடம் இல்லாத மிகப் பெரிய பலம் என்னவெனில், எதையும் அரைகுறையாக செய்வது கிடையாது. நன்கு திட்டமிட்டு, தெளிவாக, எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, ஆழமாக அதே சமயம் அழுத்தமாக அடியெடுத்து வைப்பதுதான். அப்படித்தான் வளர ஆரம்பித்தது பாஜக. 80களில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் மதக் கலவரங்கள் அதிக அளவில் வெடித்தன. அந்தக் காலகட்டத்தில்தான் இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் நோக்குடன் பாஜக உருவானது. மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்களை அது குறி வைத்து தன் பக்கம் ஈர்த்தது. இந்துக்களுக்கான கட்சி இது என்பதை அவர்களது மனதில் அழுத்தமாக பதிய வைத்தது.

ஆரம்பத்தில் இந்து தேசியவாத கட்சியாகவே தன்னை பகிரங்கமாக காட்டிக் கொண்டது பாஜக. ஆனால் உடனடியாக அந்த தோற்றம் அதற்கு பலன் கொடுக்கவில்லை. கட்சி தொடங்கி நான்காவது ஆண்டான 1984ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வென்றது பாஜக. ஆனாலும் பாஜக சோர்வடையவில்லை. மாறாக முன்னை விட அதிகமாக வேலை பார்க்க ஆரம்பித்தது.

அத்வானி தலைவரான பிறகு பாஜகவின் பாதை வேறு மாதிரியாக மாற ஆரம்பித்தது. ராமரைக் கையில் எடுத்தார் அத்வானி. மத ரீதியாக இந்துக்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்தது பாஜக. இது அகில இந்திய அளவில் பாஜகவை மக்களிடம் வேகமாக கொண்டு போய்ச் சேர்த்தது. குறிப்பாக இந்துக்களிடம் பாஜகவை நெருக்கமாக கொண்டு போய்ச் சேர்த்தது. 1989 நாடாளுமன்றத் தேர்தலில் 85 இடங்களில் வென்றது பாஜக.

அதன் பின்னர் 1999ம் ஆண்டு ரத யாத்திரையைத் தொடங்கினார். இது நாடு முழுவதும் ஒரு விதமான எழுச்சி அலையை பாஜகவுக்கு உருவாக்கியது. நாடு முழுவதும் பாஜகவுக்கான ஆதரவும் அதிகரிக்கத் தொடங்கியது. பாஜகவின் இந்துத்வா கொள்கையால் ஈர்க்கப்பட்ட பலரும் பாஜக பக்கம் திரும்ப ஆரம்பித்தனர். இறுதியில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும், வன்முறைகளையும் ஏற்படுத்தியபோதிலும், பாஜகவுக்கு மிகப் பெரிய லாபமும், பலனும் கிடைத்தது.

ராமரையும், முஸ்லீம் எதிர்ப்பையும் ஒருங்கிணைத்து பாஜக தீட்டிய திட்டத்தில் இந்துக்கள் வந்து விழுந்தனர். பாஜக புதிய பலத்துடன் அசுர வேகத்தில் வளர இது அடிப்படையாக அமைந்தது. தொடர்ந்து இதே பாதையில் தீவிரமாக பயணிக்க ஆரம்பித்த பாஜக, ஒவ்வொரு கலவரத்தையும், தனக்கு சாதகமாக மாற்றியது என்பதை விட, அந்த கலவரங்கள் இந்துக்களை பாஜக பக்கம் வேகமாக ஈர்த்துக் கொண்டு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாஜக வளர்ந்து வந்த வேகத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சரியாக கணிக்கத் தவறி விட்டன, இதனால் பாஜகவை அலட்சியமாக கருதின. ஆனால் இதையெல்லாம் பாஜக பொருட்படுத்தவே இல்லை. தனது இலக்கில் மிகத் தெளிவாக இருந்து இன்று இந்த நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது. யாரெல்லாம் பாஜகவை குறைத்து மதிப்பிட்டார்களோ, இன்று அவர்கள் எல்லோரும் முகவரி இழந்த நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்வானி தலைமையிலான பாஜக தனது 3வது தேர்தலிலேயே விஸ்வரூபத்தைக் காட்டியது. 1984ல் 2 இடங்கள் வென்ற பாஜகவுக்கு, 1989 ல் 85 இடங்கள் கிடைத்த நிலையில், 1991 லோக்சபா தேர்தலில் 120 தொகுதிகள் கிடைத்தன. அழுத்தமான எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுத்தது. அதைத் தொடர்ந்து
வாஜ்பாய்
காலத்தில் இன்னும் வேகமான வளர்ச்சியைப் பெற்றது பாஜக.

1996ல் 161 தொகுதிகள், 1998ம் ஆண்டு 182, 1999ல் 182, 2004ம் ஆண்டு தேர்தலில் 138 என பாஜக தொடர்ந்து வளர்ந்தது. வாஜ்பாய் தலைமையில் முதல் பாஜக ஆட்சியையும் இந்தியா கண்டது. அதைத் தொடர்ந்து 2009 தேர்தலில் 116 இடங்களை வென்றது பாஜக. அதந் பிறகு வந்தது நரேந்திர மோடியின் காலம்.

வாஜ்பாய் மறைவுக்குப் பிறகு
நரேந்திர மோடி
வசம் வந்த பாஜகவுக்கு புதிய உருவம் கொடுத்தார் மோடி. அவருக்கு உறுதணையாக இருந்த அவரது நண்பர் அமித் ஷாவின் சாதுரியமும் உடன் சேர இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக மாறிப் போனது பாஜக. 2014 லோக்சபா தேர்தலில் அதுவரை இல்லாத அளவு 282 தொகுதிகளை வென்றது பாஜக. பாஜகவுக்கு லோக்சபாவில் அதிக அளவு சீட் கிடைத்தது அதுவே முதல் முறையாகும். அதைத் தொடர்ந்து 2019 தேர்தலில் இன்னும் ஒரு படி மேலே போய் 303 தொகுதிகளை வன்று அசத்தியது பாஜக

பாஜகவின் வளர்ச்சியை சாதாரணாமாக பலரும் மதிப்பிட்டு விட்டனர். அதனால்தான் இன்றைய வலுவான நிலைக்கு அது வந்து சேர்ந்துள்ளது. ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்தே எடுத்து வைத்து வந்துள்ளது பாஜக. இதனால்தான் யாரும் அதை சாய்க்க முடியவில்லை. காரணம், அந்த அளவுக்கு பலமான அஸ்திவாரத்துடன், தனது வளர்ச்சியை கட்டி எழுப்பியுள்ளது பாஜக என்பதே உண்மை. இன்னும் சில பத்தாண்டுகளுக்கு பாஜகவை யாரும் அசைக்க முடியாத அளவுக்கு அது எதிர்கால கண்ணோட்டத்துடனும் வளர்ந்து வருகிறது என்பதையும் யாரும் மறந்து விடக் கூடாது.

காங்கிரஸ் கட்சி என்னெல்லாம் தவறு செய்ததோ அதையெல்லாம் பார்த்துப் பார்த்து தன்னைத் திருத்திக் கொண்டு, தனது இலக்கு எது என்பதை தெளிவாக வகுத்துக் கொண்டு, யாரையும் திரும்பிப் பார்த்து குழப்பமடையாமல், தொய்வடையாமல் தெளிவாக நடை போட்டு வருகிறது பாஜக. ஒரு தலைவரை மட்டும் நம்பி இந்தக் கட்சி இல்லை. அடுத்தடுத்து பல தலைவர்களைப் பார்த்துள்ளது. முதலில் அத்வானி, பிறகு வாஜ்பாய், அதன் பிறகு நரேந்திர மோடி என்று பெரும் தலைவர்கள் உருவெடுத்தாலும் கூட பல தரமான 2ம் கட்டத் தலைவர்களையும் அது வைத்திருந்தது, வைத்திருக்கிறது. இதுதான் அந்தக் கட்சி தெளிவாக வளர்ச்சி அடைய முதல் முக்கியக் காரணம்.

பிற கட்சிகள் எல்லாம் குடும்பத்துக் கட்சியாகவே இருக்கின்றன. அவர்களது வாரிசுகள்தான் தலைவர்களாக வந்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் இதற்கு நல்ல உதாரணம். இந்திரா காந்தி இருந்தார், பிறகு மகன் ராஜீவ் காந்தி வந்தார். அடுத்து அவரது மனைவி சோனியா காந்தி பதவி வகித்தார். சில காலம் அவரது மகன் ராகுல் காந்தி தலைவராக இருந்தார். இப்போது மீண்டும் சோனியாவே இருக்கிறார். அப்படியே பாஜக பக்கம் திரும்பிப் பார்த்தால் அங்கு இதுபோன்றதொரு காட்சியைக் காணவே முடியாது.

ஆர்எஸ்எஸ்ஸின் வழிகாட்டல் ஒரு பக்கம், தெளிவான தலைமை மறுபக்கம்.. சொன்னதைக் கேட்கும் நிர்வாகிகள்.. அதன்படி நடக்கும் தொண்டர்கள் என ஒட்டுமொத்த கட்சியும் குழப்பம் இல்லாமல் செயல்படுவதால்தான் பாஜக இந்த குறுகிய காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. நூற்றாண்டுகளைக் கடந்த காங்கிரஸுக்கும், நீண்ட காலமாக தேசிய அரசியலில் நாட்டாமை செய்து கொண்டிருந்த பல பிராந்தியக் கட்சிகளுக்கும் சேர்த்தே ஆப்பு வைத்து தனது இருப்பை வலுப்படுத்திக் கொண்டுள்ளது பாஜக.

2 எம்.பிக்களில் ஆரம்பித்த பாஜகவின் வளர்ச்சி இன்று 303 எம்.பிக்களில் வந்து நிற்கிறது என்றால் நிச்சயம் அது சாதாரணமானதில்லை.. கடுமையான உழைப்பால் வந்த விளைவுதான் இது என்று தாராளமாக கூறலாம்.

அடுத்த செய்தி’கலகலப்பு’ பட பாணியில் ஜன்னலில் சிக்கிய திருடன் – வீடியோ உள்ளே!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.