அதிபர் கோத்தபய ராஜினாமா? இலங்கை அமைச்சர் மறுப்பு!| Dinamalar

கொழும்பு:’அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய மாட்டார்’ என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில்,கொரோனா பரவலுக்குப் பின் அன்னிய செலாவணி தட்டுப்பாட்டால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை, பல மடங்கு உயர்ந்துள்ளது.பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுதும் பல மணி நேர மின் வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, 1ம் தேதி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார்.

ஐந்து நாட்கள் அமலில் இருந்த அவசர நிலை, நேற்று முன்தினம் இரவு ௧௨ மணிக்கு ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில், இலங்கை எம்.பி.,க்கள் பலர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து அனைத்து கட்சிகளையும் கொண்ட ஒருங்கிணைந்த அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த அழைப்பை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. இதனால் இடைக்கால அமைச்சர்களாக நான்கு பேரை, அதிபர் கோத்தபய நியமித்தார். இவர்களும் உடனே பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஆனால், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி, தன் பதவியை அடுத்த நாளே ராஜினாமா செய்தார். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இலங்கை பார்லிமென்டில் அமைச்சர் ஜான்சன் பெர்னாண்டோ கூறியதாவது:நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை, அரசு நிச்சயம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும். அதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்வார் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில், அரசியலுக்கு இடமில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக, மக்களிடம் வன்முறையை துாண்டுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.