கராச்சி: பாகிஸ்தானில் நிலவிவரும் அரசியல் நெருக்கடியால், டாலருக்கு நிகரான அந்நாட்டு ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 191 என சரிவைச் சந்தித்துள்ளது.
பாகிஸ்தானில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமின்மையால் கடந்த பல மாதங்களாக அந்த நாட்டின் ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே வந்தது. இந்த நிலையில், கடந்த வாரத்தில் இம்ரான் கான் அரசின் மீது எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தாக்கல் செய்தபோது ரூபாயின் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
கடந்த ஒரு மாதத்தில் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 6 சதவீதத்திற்கும் மேலாக இழப்பைச் சந்தித்துள்ளது. இன்று வியாழக்கிழமை வெளிச்சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 191 ஆகவும், இன்டர்பேங்க் சந்தையில் 189 ஆகவும் இருந்தது.
இதுகுறித்து கராச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தரகு மற்றும் பொருளாதர ஆராய்ச்சி நிறுவனமான டாப்லைன் செக்யூரிட்டிஸின் தலைவர் கமது சோஹைல் கூறும்போது, “நிலவிவரும் குழப்பம் மற்றும் அரசியல் நிச்சயமற்றத்தன்மை, ரூபாயின் மதிப்பில் மிக மோசமாக பிரதிபலிக்கிறது” என்றார்.
வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தை நம்பியிருக்கும் பாகிஸ்தான் அந்நியச் செலாவணி கையிருப்பு, வளர்ந்து வரும் வர்த்தகப் பற்றாக்குறையைத் தடுக்கத் தவறிவிட்டது. இதனால், 2021-22ம் நிதியாண்டின் 9 மாதங்களில் பற்றாக்குறை 70 சதவீதத்தை எட்டியதால் மார்ச் முதல் வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 16 பில்லியன் டாலரில் இருந்து 12 பில்லியன் டாலாக குறைந்தது. கடந்த 2021 முதல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 சதவீதத்தை இழந்துள்ளது.
ரூபாயின் மதிப்பிழப்பிற்கு பாகிஸ்தானின் அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உடனான உறவுகளும் முக்கியக் காரணிகளாகும். கடந்த 2019-ம் ஆண்டு பாகிஸ்தானில் நிலவி வந்த திருப்பிச் செலுத்தும் இருப்பில் நிலவும் சிக்கலைத் தீர்ப்பதற்காக சர்வதேச நாணய நிதியம், 6 பில்லியன் டாலர் பிணை எடுப்புத் தொகையாக தர ஒப்புதல் அளித்திருந்தது. அதில் பாதி தொகை தரப்பட்டுள்ள நிலையில், நிலுவையில் உள்ள தொகை வழங்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.