இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடி தொடர்வதால், அங்கு தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி வலியுறுத்தி உள்ளார். பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் சபாநாயகர் இந்த தீர்மானத்தை ரத்து செய்தார். இதனிடையே, இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. 90 நாளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இடைக்கால பிரதமராக இம்ரான் கான் நீடிக்கிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்ததுணை சபாநாயகர் அனுமதிக்காதது அரசியல் சாசன சட்டப்படி விதிமுறை மீறலா, இல்லையா என்பது குறித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இந்தவார இறுதியில் அறிவிக்கவுள்ளது.இந்நிலையில், பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடிக்கு முடிவுகட்ட, தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி வலியுறுத்தி உள்ளார். பிரச்சாரத்தில் கவனம் எதிர்க்கட்சிகள், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், இடைக்கால பிரதமர் இம்ரான் கான், அடுத்த தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். லாகூரில் கட்சி தொண்டர்களிடம் பேசிய அவர், தனது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தப்போவதாக கூறியுள்ளார்.