சென்னை: அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவப் படிப்பில் அரசு வழங்கிய 7.5% உள் ஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால், அவர்கள் மருத்துவ படிப்பில் சேர 7.5% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதுபோல் தங்களது பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் வழக்கு தொடர்ந்தன. அவர்களது மனுக்களில், மருத்துவம், பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% உள் ஒதுக்கீட்டை விரிவுபடுத்த வேண்டும் என கோரியிருந்தன.
இந்த வழக்கின் பலகட்ட விசாரணை நடத்தி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று தலைமைநீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% வழங்கும் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் இதுகுறித்து 5 ஆண்டுகளுக்கு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளது.