பெங்களூரு : கல்லுாரியில் ‘அல்லாஹு அக்பர்’ என கோஷமிட்ட மாணவியை புகழ்ந்து, சர்வதேச பயங்கரவாதியான அல்கொய்தா தலைவர் அம்மான் அல் ஜவாஹிரி ‘வீடியோ’ வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த மாணவியின் தந்தை, ‛இங்குள்ள ஹிந்துக்களும், நாங்களும், சகோதரர்கள் போல வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு யாருடைய ஆதரவும் வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பிப்ரவரியில் முஸ்லிம் பெண்கள் தலை மற்றும் முகத்தை மூடி அணியும் உடையான ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருந்தது. பிப்ரவரி 8ல் மாண்டியாவில் உள்ள பி.இ.எஸ்., கல்லுாரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவி முஸ்கானை பார்த்து, ஹிந்து மாணவர்கள் சிலர், ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் எழுப்பினர். இவர்களுக்கு போட்டியாக முஸ்கான், ‘அல்லாஹு அக்பர்’ என கோஷம் எழுப்பினார்.
சர்ச்சை
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, மாணவிக்கு முஸ்லிம் பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்தனர். மஹாராஷ்டிரா காங்கிரஸ் பிரமுகர், மாண்டியா ம.ஜ.த., பிரமுகர் உள்பட பலர் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்ததோடு பணம், பரிசு பொருட்கள் கொடுத்தனர். இதனால் அவர் தேசிய அளவில் பிரபலமானார். இந்நிலையில், சர்வதேச அளவில் தேடப்படும் பயங்கரவாதியான, அல்கொய்தாவின் தலைவர் அம்மான் அல் ஜவாஹிர், மாண்டியா மாணவி முஸ்கானை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எட்டு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், ‘இந்தியாவில் முஸ்லிம்கள் தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர். ஹிஜாப்புக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவி முஸ்கான் இந்தியாவின் சிறந்த பெண். அவரது போராட்டம் எனக்கு ஆனந்தத்தை அளிக்கிறது. ‘இந்தியாவின் தவறான நடவடிக்கைக்கு எதிராக அனைத்து முஸ்லிம்களும் எதிர்த்து நிற்க வேண்டும். ஹிஜாப் நம் மதத்தின் உரிமை’ என கூறி, முஸ்கானை வர்ணித்து கவிதை ஒன்றையும் அவர் வாசித்துள்ளார். தற்போது சர்வதேச பயங்கரவாதி மாண்டியா மாணவியை புகழ்ந்ததால் இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை எழுப்பி உள்ளது.
சகோதரர்கள் போல…
இது குறித்து, மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறியதாவது: ஹிஜாப் பின்னணியில் சர்வதேச அளவிலான சூழ்ச்சி அடங்கி உள்ளது என்று நான் இதற்கு முன்பே கூறி இருந்தேன். இப்போது சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் கூட ஆதரவு தெரிவிக்கின்றன. இது குறித்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய விசாரணை குழு விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, அந்த மாணவியின் தந்தை உசேன் நேற்று கூறியதாவது: நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம். இங்குள்ள ஹிந்துக்களும், நாங்களும், சகோதரர்கள் போல வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு யாருடைய ஆதரவும் வேண்டாம். எங்களை விட்டு விடுங்கள். என் மகள் அன்று இது போன்ற கோஷம் எழுப்பி இருக்க கூடாது. அது தேவையில்லாத பிரச்னையை கொண்டு வந்து விட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.