இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மத்திய அரசால் 2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், ஊதிய உயர்வு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், “ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீட்டிக்கத் தகுதியில்லை. தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் என்று அறிவித்து 12 ஆண்டுகளை கடந்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெறவும் உரிமை இல்லை.
அப்படி தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை தொடர்ந்து பணிபுரிய அனுமதித்ததற்கு அரசு கண்டிக்கப்படுவதோடு, கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் தகுதி தேர்வை இனி ஒவ்வோர் ஆண்டும் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
மாணவர்களுக்குத் தரமான கல்வி சேர வேண்டும் என்றால் அதற்குத் தகுதியான நபர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். அறிவுத் திறமை, தொழில்நுட்பம் என ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் ஆசிரியர்களால் மட்டுமே திறமையான மாணவர்களை உருவாக்க முடியும்” எனக் குறிப்பிட்டு பேசினார்.