ஆந்திராவில் பெட்ரோல் பங்கில் 40 லிட்டர் பெட்ரோலை திருடிய மூவர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஆந்திராவில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.121. விலை உயர்வு நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், ஆந்திராவில் பெட்ரோல் திருட்டு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
குண்டூர் மாவட்டம் பிரதிபடு என்ற இடத்தில் கொத்தனார்களாக நண்பர்கள் மூவர் பணிபுரிந்து வருகின்றனர். மூவரும் காசு கொடுத்து பெட்ரோல் போட விரும்பாமல் எளிதில் பணம் சம்பாதிக்க விரும்பி பெட்ரோல் திருட முடிவு செய்தனர். இதற்காக அதிகாலை 2 மணியளவில் மூவரும் பிரதிபடு நகரத்தில் உள்ள ஹெச்பி பெட்ரோல் பங்கிற்கு வந்தடைந்தனர்.
ஊழியர்கள் ஒரு அறையில் தூங்குவதை அறிந்த அவர்கள், அவர்களை உள்ளே வைத்து அந்த அறையை பூட்டினர்.தாங்கள் கொண்டு வந்த இரண்டு 20 லிட்டர் கேன்களில் பெட்ரோல் நிரப்பினர். அதன் பின்னர் ஊழியர்கள் அறையை மீண்டும் திறந்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். காலையில், ஊழியர்கள் பெட்ரோல் கையிருப்பைக் கணக்கிட்டபோது, கொள்ளை நடந்ததை உணர்ந்து காவல்துறையை அணுகினர்.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM