கடந்த 2019-ம் ஆண்டு ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 150-தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது. அதைத் தொடர்ந்து முதல்வராகப் பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டி, இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது, ஒய்.எஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவை மூன்று ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், புதிய அமைச்சர்களை நியமனம் செய்ய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். சமீபத்தில், டெல்லி சென்ற முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உட்பட பலரைச் சந்தித்து மாநில வளர்ச்சிப் பணிகள், நிதிப் பற்றாக்குறை போன்றவை குறித்து விவரித்தார்.
டெல்லியிலிருந்து திரும்பிய ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பாக ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தனைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு வரும் 11-ம் தேதி புதிய அமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
அதைத்தொடர்ந்து, இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து அமைச்சர்களிடமும் இருந்து ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. இந்த நிலையில், நாளை புதிய அமைச்சரவை பட்டியல் ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்திடம் வழங்கப்படவிருக்கிறது.