பெங்களூரு: ஆம்னஸ்டி அமைப்பின் முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான ஆகார் படேல், அமெரிக்கா செல்வதற்காக நேற்று பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அவர் மீது லுக்-அவுட் நோட்டீஸ் இருப்பதாகக் கூறி, குடிவரவு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து ஆகார் படேல் கூறுகையில், “எனது நூல்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக அமெரிக்காவில் உள்ள 3 பல்கலைக்கழகங்கள் என்னை அழைத்திருந்தன. இந்தியாவில் சிவில் சமூகத்தின் மீது எத்தகைய தாக்குதல் நடைபெற்று வருகிறது என்பது குறித்து அங்கு பேசவிருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தேன்.கடந்த 2020-ம் ஆண்டு குஜராத் பாஜக எம்எல்ஏ தொடுத்த வழக்கில் எனது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை நீதிமன்றத்தின் வாயிலாக திரும்பப் பெற்று இந்தப் பயணத்துக்கு தயாரானேன்.
என் மீது சிபிஐ லுக்-அவுட் நோட்டீஸ் இருப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் சிபிஐயின் கண்காணிப்பில் இருந்தால் என்னை கைது செய்திருக்கலாமே? இந்த நாட்டில் சிவில் சமூகம் எவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகிறது என்பதை இதன் மூலம் அரசு வெளிக்காட்டிள்ளது. இந்தப் பிரச்சினையை விரைவில் நீதிமன்றத்தில் முறையிட உள்ளேன்” என்றார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆகார் படேல் நேற்று வழக்கு தொடுத்துள்ளார். அந்த மனு குறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.