சிட்னி: ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் ஒரு மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை, ஒரே இரவில் பதிவாகியுள்ளது. அதனால் அந்த நகரமே மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
பரபரப்பான இந்த உலகம் பல்வேறு பிரச்சினைகளுக்கும் இடையே காலநிலை மாற்றத்தை மறந்துவிடுகிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்றிரவு பெருமழை பெய்தது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், குடியிருப்புகள் என நகரின் பல முக்கிய இடங்களும் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சிட்னி நகரில் வசிக்கும் 50 லட்சம் மக்களையும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது நகர நிர்வாகம்.
சிட்னி நகரில் இந்த ஆண்டில் இதுவரை 1226.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது ஆண்டு சராசரியான 1,213 மில்லி மீட்டரை காட்டிலும் சற்று அதிகம். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சுற்றுலா தலமான போண்டியில் அதிகபட்சமாக 170 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் 180 மில்லி மீட்டர் மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பருவம் தவறிய மழை, பஞ்சம், பெருமழைகள் என பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.
சிட்னியில் இப்படி பெருமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதே நேரத்தில் ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவில் கடும் வறட்சி நிலவுகிறது. கால்நடைகள்தான் அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம். ஆனால், கடும் வறட்சியால் கால்நடைகளும் செத்து மடிய மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.