வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மிக வேகமாக பரவக்கூடிய, உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான் எக்ஸ் இ’ வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, இந்தியாவில் ‛எக்ஸ் இ’ வகை கொரோனா கண்டறியப்படவில்லை என விளக்கமளித்துள்ளது.
நாட்டில், இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக இருந்த கொரோனா வைரஸ் பரவல், தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில், அதிவேகமாக பரவக்கூடிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசான ‛ஒமைக்ரான் எக்ஸ் இ’ வகை பாதிப்பு, முதல் முறையாக மும்பையில் கண்டறியப்பட்டதாக மும்பை பெருநகர மாநகராட்சி நேற்று (ஏப்.,6) தெரிவித்தது.
இந்த நிலையில், மும்பையில் கண்டறியப்பட்டவரின் மாதிரியை மரபணு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் உடலில் எடுக்கப்பட்ட வைரஸின் மரபணு அமைப்பு, ‛எக்ஸ் இ’ வகை மாறுபாட்டின் மரபணு அமைப்புடன் ஒத்துப்போகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து மும்பையில் கண்டறியப்பட்டது உருமாறிய ‛எக்ஸ்இ’ கொரோனா தொற்று இல்லை எனவும் இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று குறித்து தவறான தகவல் வெளியானதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
மேலும், ‛எக்ஸ் இ’ தொற்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட 50 வயது பெண், இரு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளதாகவும், கடந்த பிப்.,10ம் தேதி தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்த அவருக்கு அறிகுறிகளோ, இணை நோய்களோ இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement