கொரோனா
வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ உலகம் முழுவதும் பரவி வரகிறது. இது அதிவேமாக பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறியதாவது, “ஒமைக்ரான் வைரஸின் பிஏ.2 துணை மாறுபாட்டை விட எக்ஸ்இ எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபானது, 10 சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. தற்போது வரை, ஒமைக்ரானின் பிஏ.2 துணை மாறுபாடு கொரோனா வைரஸ்களில் மிகவும் தீவிரமானதாக கருதப்படுகிறது. எக்ஸ்இ தொடர்பான புதிய ஆராய்ச்சி உறுதிசெய்யப்பட்டால், அது இன்னும் தீவிரமாக பரவக்கூடிய கொரோனா வகையாக இருக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் எக்ஸ்இ எனப்படும் புதிய மாறுபாடு ஓமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து முழுவதும் இதுவரை 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்றதொரு திரிபு பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம் போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக கருதப்படும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் இந்த அறிவிப்பானது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் எக்ஸ்இ வகை கொரோனா கண்டறியப்பட்டதாக
மும்பை
மாநகராட்சி நேற்று தெரிவித்தது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் மும்பை வந்த ஆடை அலங்கார பெண் கலைஞருக்கு மார்ச் 2ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவருக்கு எக்ஸ்இ வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தி குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, மும்பையில் கண்டறியப்பட்டது ஒமைக்ரானின் உருமாற்ற வகையான எக்ஸ்இ (XE) வைரஸ் வகைத் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. INSACOG மரபணு நிபுணர்கள் நடத்திய ஆய்வில் XE வகைத் தொற்று இல்லை என தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.