வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்; ரஷ்யாவை நாடாத பட்சத்தில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வழங்க தயாராக உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே ரஷ்யாவிடம் வாங்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இருந்தும், இந்தியா, குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கா, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங்கை இந்தியாவுக்கு அனுப்பியது. அவர், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேச்சு நடத்தினார்.
இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி துறை செயலர் ஜென் சகி கூறியதாவது:
பொருளாதார தடையை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதிக்க, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகரை டில்லிக்கு அனுப்பியுள்ளோம். ரஷ்ய பொருட்கள் இறக்குமதியை, இந்தியா குறைப்பது தொடர்பாக பேச்சு நடக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இதர பொருட்கள் இறக்குமதியை இந்தியா அதிகரிக்காது என நம்புகிறோம். கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement