புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகமான அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சுமார் 40,000 மாணவர்கள் பயில்கின்றனர்.
இங்குள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவப் பல்கலை.யின் தடயவியல் ஆய்வுத் துறையில் உதவிப் பேராசிரியராக டாக்டர் ஜிதேந்திரா குமார் பணியாற்றுகிறார். இவர் தனது துறையில் ஆற்றிய உரையில், பாலியல் பலாத்காரத்திற்கு இந்துக்களின் கடவுளை உதாரணமாகக் காட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து ஜிதேந்திரா குமாரை கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், உதவிப் பேராசிரியர் ஜிதேந்திரா குமாரிடம் 24 மணி நேரத்தில் விளக்கம் கேட்டு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து விசாரணை செய்ய 2 பேராசிரியர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இச்சூழலில், ஜிதேந்திரா தனது நடவடிக்கைக்கு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார். எனினும் ஜிதேந்திரா குமார் மீது முதல்கட்ட நடவடிக்கையாக அவரை நிர்வாகம் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்துள்ளது.