புதுடெல்லி: கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உலகம் முழுவதும் பலர் வேலையிழப்புக்கு ஆளான சூழலில் தற்போது தகுதி வாய்ந்த, திறமையான நபர்களை கூடுதல் சம்பளம் கொடுத்து தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் விரும்புவதாக தெரிகிறது. இந்த ஆண்டு எந்ததுறையில், எந்த பிரிவில் அதிக சம்பள உயர்வு, அதிக வேலைவாய்ப்பு இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு உள்ளிட்டவை அமலாகின. நிலைமை படிப்படியாக சீரடைந்த பிறகும் வீட்டிலிருந்து ஊழியர்கள் பணிபுரிவதால் நிறுவனங்களுக்கு நிர்வாக செலவு குறைந்தது.
பல நிறுவனங்கள் பெரிய அலுவலகங்களை காலி செய்துவிட்டு, வெறுமனே கருத்தரங்கு அறை மற்றும் கம்ப்யூட்டர் சர்வரை பராமரிக்க ஒரு அறை ஆகியவற்றைக் கொண்ட சிறிய அலுவலகங்களுக்கு மாறிவிட்டன. தற்போது கரோனா அச்சம் அகன்றுள்ள நிலையில் பொருளாதார சூழல் வேகமெடுத்து வருகிறது.
கரோனாவுக்கு பின் மாறி வரும் சூழல்
காலச் சக்கரம் எப்போதும் ஒரு தரப்புக்கு சாதகமாக சுழலாது என்பதைப் போல கடந்த ஆண்டு முதல் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கொத்து கொத்தாக ராஜிநாமா செய்தனர். அதிலும் குறிப்பாக நடுத்தரப் பிரிவு அலுவலர்கள் பெரிய அளவில் வெளியேறினர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமின்றி இந்தியா உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலும் இந்த நிலை எதிரொலித்தது.
ஊழியர்கள் ராஜிநாமா என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் என்றில்லாமல் பல துறைகளிலும் நிகழ்ந்தது. கிரேட் ரெசிக்னேஷன் (Great Resignation), தமிழில் பெரு ராஜிநாமா என இதனை வர்ணித்தார் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண பேராசிரியர் அந்தோனி குலோட்ஸ்.
கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் ராஜிநாமா செய்தவர்களின் எண்ணிக்கை 4.70 கோடி. 2021 தொடக்கத்தில் தொடங்கிய இந்த பெரு ராஜினாமா இந்த ஆண்டும் தொடர்கிறது. இதனால் ஊழியர்களை தக்க வைக்க கூடுதலான சலுகைகள் மற்றும் சம்பள உயர்வு இந்த ஆண்டு வழங்கப்பட்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டில் எந்த துறையில் அதிகமான வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு சராசரியாக 9 சதவீத சம்பள உயர்வை வழங்க வாய்ப்புள்ளது என தனியார் ஆய்வு நிறுவனமான இந்தியா இன்க் அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் சாதகமான முதலீட்டுக் கண்ணோட்டம் இருப்பதால், அதுசார்ந்த துறைகளில் வாய்ப்புகளும், சம்பள உயர்வும் இருக்கும் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. ,
இதுபோலவே சர்வதேச மற்றொரு ஆய்வு நிறுவனமான மைக்கேல் பேஜ் சம்பள அறிக்கை 2022 இன்படி, இந்த ஆண்டு சம்பள உயர்வு 9 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 இன் தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டில் கூட 7 சதவீதம் என்ற அளவில் சம்பள உயர்வு இருந்தநிலையில் தற்போது 9 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
ஸ்டார்ட் அப், ஐடி துறைகள்
யூனிகார்ன்கள் உள்ளிட்ட ஸ்டார்ட்அப்கள், புதிய நிறுவனங்களில் சம்பள உயர்வு 12 சதவீதம் வரை இருக்கலாம் என தெரிகிறது. வங்கி மற்றும் நிதிச் சேவைகள் தொழில், சொத்து மற்றும் கட்டுமானம், உற்பத்தி உள்ளிட்ட வளர்ச்சி சார்ந்த துறைகளில் அதிகமான சம்பள உயர்வும், வேலைவாய்ப்பு உருவாகக்கூடும் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
கணினி அறிவியல் பின்னணியைக் கொண்ட மூத்த நிலை பொறியாளர்கள் இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் சில வேலைகளுக்கு பேரம் பேசும் சிறந்த நிலையில் இருப்பார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
இ-காமர்ஸ்
இ-காமர்ஸ் மற்றும் அது சார்ந்த சில துறைகளின் வளர்ச்சியின் காரணமாக டிஜிட்டல் மாற்றம் தொடர்பான துறைகளிலும் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. புள்ளி விவரங்கள் தொடர்பான வல்லுநர்கள், ஆய்வாளர்கள் இயந்திர கற்றலை நன்கு அறிந்தவர்கள், வலை உருவாக்குநர்கள், கிளவுட் ஆர்கிடெக்ட்கள் போன்றவர்கள் அதிகஅளவில் தேவைப்படுகிறார்கள். எனவே அது சார்ந்த புதிய வேலைவாய்ப்பும், பதவி உயர்வும், சம்பள உயர்வும் ஏற்படக்கூடும்.
இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருந்தால், உயர்தர பல்கலைக்கழகத்தில் இருந்து அதிக தேவை ஏற்படக் கூடும். வழக்கம்போலவே தொழில்நுட்ப வல்லுநர்களின் சராசரி சம்பளம் மற்ற வேலை செயல்பாடுகளில் இதே போன்ற கல்வித் தகுதிகளைக் கொண்டவர்களை விடவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் இருக்கும் நிலை தான் என்றாலும் தற்போது ஐடி துறையின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதால் இவர்களுக்கு கூடுதல் மவுசு உருவாக்கலாம்.
25% சதவீதம் வரை
நிறுவனங்கள் இப்போது குறுகிய கால, காலாண்டு அல்லது அரையாண்டு, மதிப்பீட்டு சுழற்சிகள், பதவி உயர்வுகள், பங்கு ஊக்கத்தொகைகள், தக்கவைப்பு போனஸ்கள் மற்றும் இடைக்கால அதிகரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. இதன் மூலம் சிறந்த செயல்திறன் மிக்கவர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் தேவை நிறுவனங்களுக்கு இருக்கிறது என்று மைக்கேல் பேஜ் சம்பள அறிக்கை 2022 தெரிவித்துள்ளது.
மைக்கேல் பேஜ் நிர்வாக இயக்குனர் அங்கித் அகர்வால் இதுகுறித்து கூறியதாவது:
கரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் ஏறக்குறைய அகன்று விட்டது. இதனால் எதிர்கால வணிகத் திட்டங்களைப் பற்றி உற்சாகமாக ஏற்பட்டுள்ளது. 8 முதல் 12 சதவீதம் வரை பொதுவான அளவில் சம்பள உயர்வு இருக்கலாம். உயர் செயல்திறன் கொண்ட தனிநபர்கள் மற்றும் முக்கியத் திறன்களைக் கொண்ட பணியாளர்களுக்கு சராசரிக்கு மேல், 20-25 சதவிகிதம் வரை கூட இந்த ஆண்டு சம்பள உயர்வு வழங்க நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.
திறமையானவர்களுக்கு பற்றாக்குறை
பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் சிறந்த திறமையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டுகின்றன. தொற்றுநோயை தாண்டி விட்டோம் என்ற பொதுவான உணர்வு இருப்பதால் ஒட்டுமொத்த மனநிலையும் நேர்மறையாக்கியுள்ளது. இதனால் ஆட்கள் தேர்வு என்பது ஒவ்வொரு நிறுவனத்திலும் சூடுபிடித்துள்ளது. சந்தையானது சிறப்பான மீளுருவாக்கம் கண்டுள்ளது, சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுகின்றன.
தேவைக்கேற்ப ஆட்கள் இல்லாதது, மிகப்பெரிய திறமை பற்றாக்குறை, தேவைக்கேற்ப திறன்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் இந்த மெகா பூஸ்ட் ஏற்பட்டுள்ளது. இது முக்கியமாக திறன் வாய்ந்த ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றும். சந்தையிலும் இத்தகைய திறமையாளர்களுக்கு பெரிய அளவில்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் முக்கிய, தனித் திறன்களைக் கொண்டவர்கள் தற்போது அதிக சம்பள உயர்வுகளைப் பெறும் சூழல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.