உலக புகழ்பெற்ற வைணவ திருத்தலமாக திருப்பதி தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். ஆனால், கொரோனா காரணமாக கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக , பெரும்பாலான மாதங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
கொரோனா மூன்றாவது அலை ஓய்ந்ததையடுத்து, பிப்ரவரி மாதம் முதலே திருமலையில் மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைன் கட்டண தரிசனம், இலவச தரிசனம் என இரண்டையும் சேர்த்து, பிப்ரவரி நாள் ஒன்றுக்கு சராசரியாக 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த எண்ணிக்கை மார்ச் மாதம் இருமடங்கானது. அதாவது கடந்த மாதம் நாள்தோறும், 300 ரூபாய் ஆன்லைன் கட்டண தரிசனத்தில் 30 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 30 ஆயிரம் பக்தர்களும் ஏழுமலையானை தரிசித்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றுடன் விஐபி பிரேக் தரிசனம் உள்ளிட்டவற்றை சேர்த்து மார்ச் மாதம் மட்டும் மொத்தம் 19.72 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக
திருமலை திருப்பதி
தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், பக்தர்கள் மொத்தம் 125 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்துக்கு பிறகு, மார்ச் மாதம் தான் மீண்டும் இந்த அளவுக்கு உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.