இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு அதிகரித்துச் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றன.
பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை விண்ணைத் தொடுகின்றன. மூன்று மாதங்களுக்கு முன்னரே ஆப்பிள் கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்டது. தற்போது அது ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. பேரிக்காய் கிலோ 1500-க்கு விற்கப்படுகிறது.
இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை வாழ் தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் என்று, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, “தமிழகத்திலிருந்து அரிசி, பருப்பு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருள்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.
மேலும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் பொருள்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இன்னும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உதவத் தயாராக உள்ளது” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.