இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய 3 தமிழர்கள் கொண்ட குழுவை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
கொரோனாவால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில் பொது மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே செல்கிறது. அரசுக்கு எதிராக முதலில் பொது மக்கள், இளைஞர்கள் போராடத் தொடங்கிய நிலையில், தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்டோர் இணைந்து மெகா போராட்டமாக வலுப்பெற்று உள்ளது.
இந்நிலையில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து ஆராயவும், சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பில் உள்ள இலங்கை நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, கடன் நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண மூன்று தமிழர்கள் அடங்கிய பொருளாதார குழுவை அரசு அமைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவையில் ராஜபக்சே குடும்பத்தினருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் கோட்டபய ராஜபக்சே பதவி விலக வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தில் அமைச்சரவை பதவியேற்பின் போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.