மாஸ்கோ: உக்ரைனில் நான்கு நான்கு நகரங்களில் அமைந்திருந்த எரிபொருள் சேமிப்பு நிலையங்களைத் தாக்கி அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “உக்ரைனின் மைக்கோலேவ், கார்கிவ், சபோரிஜியா மற்றும் சுஹுயிவ் நகரங்களில் இருந்த எரிபொருள் சேமிப்பு நிலையங்களை ரஷ்ய வான்வழித் தாக்குதலில் தாக்கி அழிக்கப்பட்டன. மைக்கோலேவ் மற்றும் கார்கிவ் நகரங்களுக்கு அருகில், தென்கிழக்கில் உள்ள டான்பாஸ் பகுதியில் இருந்த உக்ரைன் படைகள்தான் இந்த எரிபொருள் சேமிப்பு வசதிகளை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், இவை தாக்கி அழிக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. துறைமுக நகரான மரியுபோலில் ரஷ்யப் படைகள் ஊடுருவலுக்குப் பிறகு 5,000 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் 200-க்கு மேற்பட்டவர்கள் குழந்தைகள் எனவும் மரியுபோல் மேயர் வாடிம் பாய்சென்கோ வேதனையுடன் இன்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரஷ்யாவின் அமைச்சர்கள் மீதும், அதன் அதிகாரிகள் மீதும் மேலும் கூடுதலாக பொருளாதாரத் தடைகள் விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா நடந்தும் போர் காரணமாக, உக்ரைனிலிருந்து 40 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர். அவர்களில் 90% பேர் பெண்கள், குழந்தைகள். இதுதவிர 60 லட்சம் பேர் உள்நாட்டிலேயே வாழ்விடத்திலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என ஐ.நா.வுக்கான அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.